டெல்லி: "நாடாளுமன்றப் புலி" என வர்ணிக்கப்பட்டவர் வைகோ. இன்றைக்கு அவரது மகன் துரை வைகோ எம்.பி, டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் அமித் ஷாவைக் கண்டித்து எழுப்பிய முழக்கம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
ஒருகாலத்தில் டெல்லியை தனது சரவெடி பேச்சுகளால் அதிர வைத்தவர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் முகமாகத் திகழ்ந்தார். வைகோவின் உணர்ச்சிபொங்கும் பேச்சு, மொழி தெரியாதவரையும் ரசிக்க வைக்கும். ஈழ பிரச்சனை, காவிரி விவகாரம், முல்லை பெரியாறு, இந்தி எதிர்ப்பு, எழுவர் விடுதலை, மாநில உரிமைகள், தமிழ்நாட்டுக்கு எதிரான பிரச்சனைகள் என பல விவகாரங்களில் வைகோ எழுப்பிய வலிமையான குரலை நாடாளுமன்றம் அறியும், நாடும் அறியும்.
'பார்லிமென்ட் டைகர்' - நாடாளுமன்றப் புலி என்று பலராலும் அழைக்கப்பட்டவர் வைகோ. ஸ்டெர்லைட், கதிராமங்கலம், மீத்தேன் ஆகியவற்றை உறுதியாக எதிர்த்தவர். கூடங்குளம் அணுமின் நிலையம் முதன்முதலில் அறிவிக்கப்பட்ட சமயத்திலேயே அதனை எதிர்த்தவர் வைகோ. நாடாளுமன்றத்தில் வைகோவின் குரல் ஒலிக்க வேண்டும் என்பதற்காகவே அவருக்கு ராஜ்யசபா சீட்டை வழங்கி டெல்லிக்கு அனுப்பியது திமுக.
இன்றைக்கு வைகோ, மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். அவரது மகனும், மதிமுக முதன்மைச் செயலாளருமான துரை வைகோ, மக்களவை உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார். அப்பாவுக்கு சளைக்காத மகனாக, இன்று டெல்லியையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது துரை வைகோ எழுப்பிய முழக்கம்.
மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "அம்பேத்கர், அம்பேத்கர் என முழக்கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது. அதற்கு பதிலாக, கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும்." என்று தெரிவித்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இந்தப் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டங்களில் இறங்கியுள்ளன. அமித்ஷாவை பதவி விலக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தியா கூட்டணி எம்.பிக்களின் போராட்டத்தால் 2 நாட்களாக நாடாளுமன்றமே முடங்கியுள்ளது.
இன்று, நாடாளுமன்றத்திற்கு அம்பேத்கர் படத்துடன் பேரணியாக வந்த இந்தியா கூட்டணி எம்.பிக்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக முழக்கமிட்டனர். மதிமுக எம்.பி துரை வைகோ, "வீரவணக்கம்.. வீரவணக்கம்.. அம்பேத்கருக்கு வீர வணக்கம்.." என்றும்.. "மன்னிப்பு கேள்.. மன்னிப்பு கேள்.. அமித்ஷா மன்னிப்பு கேள்.." "மோடி சர்க்கார் டவுன் டவுன்" என்றும் உரக்க முழக்கமிட்டார்.
துரை வைகோவை பின்தொடர்ந்து காங்கிரஸ் எம்.பிக்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, திமுக எம்.பிக்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு, சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பிக்கள் அமித் ஷாவை கண்டித்து முழக்கமிட்டனர். முதல் முறை எம்.பியான துரை வைகோவின் உரத்த முழக்கம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
முன்னதாக அமித் ஷா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த துரை வைகோ, "அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டைக் குறிக்கும் விவாதத்தின் போது மாநிலங்களவையில் உரையாற்றிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "அம்பேத்கரின் பெயரை பயன்படுத்துவது இப்போது ஒரு "பேஷன்" ஆகிவிட்டது. எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், என்று பேசுகிறார்கள். கடவுளின் பெயரை இவ்வாறு பலமுறை சொன்னாலாவது அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும்." என்று பேசினார்.
அரசியலமைப்புச் சட்டத்தை வடித்து தந்த டாக்டர் பி ஆர் அம்பேத்கர் அவர்களை அரசியல் சாசனத்தின் படி அமைந்திருக்கும் நாடாளுமன்றத்திலேயே உள்துறை அமைச்சர் அமித்ஷா இழிவுபடுத்தி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விக்கணைகளை எதிர்கொள்ள திராணியற்ற உள்துறை அமைச்சர் அண்ணல் அம்பேத்கர் மீது வன்மத்தைக் கொட்டி இருப்பது பாஜகவின் ஆதிக்க மனப்பான்மையைக் காட்டுகிறது." எனத் தெரிவித்திருந்தார்.