கோவை: திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதன பேச்சு, விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில், அடுத்தக்கட்டத்துக்கு இப்போது நகர்ந்துள்ளது.
உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சுக்கு பாஜக கொந்தளித்து வருகிறது.. அமித்ஷா முதல், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வரை கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
சனாதனம்: 'சனாதனம் குறித்து பேசி திமுக மீதுள்ள அதிருப்தியை திசைத்திருப்ப முயலும் உதயநிதி ஸ்டாலின், திமுகவில் சமதர்மம் இருக்கிறதா என்பதை முதலில் பார்க்க வேண்டும்' என்று ஓபிஎஸ் கூறியுள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.
இதனிடையே, உத்தரபிரதேசத்தை சேர்ந்த சாமியார் உதயநிதியின் படத்தை, கத்தியால் கிழித்து தீயிட்டு கொளுத்தியதுடன், உதயநிதியின் தலையை கொண்டு வந்தால், ஒரு கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்தார்..
தலைக்கு 10 கோடி: "என் தலையை சீவுவதற்கு, ஒரு கோடி ரூபாய் எதுக்கு? வெறும் 10 ரூபாய் சீப்பு போதுமே"என்று உதயநிதி அதற்கு பதிலடி சொல்லவும், எரிச்சலடைந்த சாமியார் தரப்பு, சன்மான தொகையாக 10 கோடி ரூபாய் என்று அதிரடியாக உயர்த்திவிட்டது.
மேலும், உதயநிதி ஸ்டாலின் மீது சுப்ரீம்கோர்ட் வழக்கறிஞர் டெல்லி போலீஸில் புகார் அளித்துள்ளார். டெல்லி தமிழ்நாடு அரசு இல்ல முதன்மை ஆணையர் ஆஷிஷ் சாட்டர்ஜி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா தலைமையில் மூத்த தலைவர்கள் குழு எதிர்ப்பு கடிதத்தையும் அனுப்பியிருக்கிறார்கள்.
உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக நிற்கிறேன்.. சனாதனத்தை ஒழிக்க வேண்டும்.. இயக்குநர் பா.ரஞ்சித் பரபர!
நாலாபக்கமும் நெருக்கடி: இப்படி நாலாபக்கமும் உதயநிதிக்கு எதிர்ப்புகள் வலுத்துள்ள நிலையில், தன்னுடைய நிலைப்பாட்டில் முன்பைவிட இப்போது இன்னும் உறுதியுடன் இருப்பதாக உதயநிதி சொல்லி வருகிறார். மற்றொருபுறம், உதயநிதிக்கான ஆதரவும், குவிந்து வருகிறது.
இதனிடையே, பாஜகவுக்கும், திமுகவுக்கும் இடையே போஸ்டர் யுத்தம் துவங்கி உள்ளது.. "போலிச்சாமியாரே 100 கோடி தர்ரோம் தொடுடா பார்க்கலாம்" என்று போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார்... உடனே இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக பாஜக சார்பில், "சனாதனம் எங்கள் உயிர் மூச்சு" என்று போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது..
விசித்திரம்: கோவை மாநகரில் டவுன்ஹால், லங்கா கார்னர், ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலெல்லாம் போட்டி போட்டுக்கொண்டு, இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருக்கிறதாம்.. எங்கே திரும்பினாலும், பாஜக, திமுக போஸ்டர்கள் இருப்பதால், கோவை மக்களே விசித்திரமாக பார்த்து செல்கின்றனர்.
கோவை மண்ணில் பாஜகவுக்கான ஆதரவு நிறையவே இருக்கிறது.. அதேபோல, கோவை உட்பட கொங்குவை தன்வசப்படுத்த திமுகவும், தீவிர முயற்சியில் இறங்கி வருகிறது. இந்நிலையில், இரு தரப்பு போஸ்டர் தகராறு, அரசியல் ரீதியாகவும் எதிரொலிக்க துவங்கிவிட்டது.