டெல்லி: மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்களுக்கான வியூகம் தொடர்பாக மத்தியில் ஆளும் பாஜகவின் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் டெல்லியில் கூடியிருக்கிறது.
பாஜக ஆளும் மத்திய பிரதேசம், பாஜக ஆதரவு தரும் மிசோரம், காங்கிரஸ் ஆட்சி செய்யும் ராஜஸ்தான், சத்தீஸ்கர், பிஆர்எஸ் ஆட்சியில் இருக்கும் தெலுங்கானா மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்பட உள்ளது. இந்த 5 மாநிலங்களுக்கு நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் முதல் வாரம் சட்டசபை தேர்தல் நடைபெறக் கூடும்.
5 மாநில சட்டசபை தேர்தல்களை பாஜகவும் எதிர்க்கட்சிகளின் "இந்தியா' கூட்டணியும் பெரும் சவாலாக கருதுகின்றன. லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில் 5 மாநில தேர்தல் முடிவுகள் மிகவும் எதிர்பார்ப்புக்குரியவை. அதுவும் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து "இந்தியா" கூட்டணி உருவாக்கப்பட்ட பின்னர் நடைபெறும் மாநில சட்டசபை தேர்தல்கள் என்பதால் நாடே உன்னிப்பாக கவனித்து வருகிறது.
இதனால் பாஜகவும், "இந்தியா" கூட்டணி கட்சிகளும் 5 மாநில சட்டசபை தேர்தல் பணிகளில் நிதானமாகவும் கவனமாகவும் செயல்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாக டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டில் பாஜக தலைவ்ர்கள் நள்ளிரவைத் தாண்டியும் 5 மாநில தேர்தல் வேட்பாளர்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். இதேபோல டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலுகமும் விடிய விடிய பிஸியாகவே இருந்தது.
இந்நிலையில் இன்று பாஜகவின் மத்திய தேர்தல் குழு கூட்டம் டெல்லியில் கூடியது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும் இந்தக் கூட்டத்துக்காக பாஜக தலைமை அலுவலகம் வருகை தந்த பிரதமர் மோடிக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பளித்தனர். ஜி20 உச்சி மாநாட்டுக்குப் பின்னர் பிரதமர் மோடி பாஜக தலைமை அலுவலகத்துக்கு முதல் முறையாக வருவதால் இந்த பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் சத்தீஸ்கர், மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தல்களுக்கான வேட்பாளர்கள் இறுதி செய்யப்படலாம் எனவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
WATCH | Top BJP leaders welcome PM Modi on his arrival at the party headquarters in Delhi
The PM is visiting the BJP headquarters for the first time after the completion of the G20 summit pic.twitter.com/OwntmkqKDE