சென்னையை நோக்கி வரும் ‛இந்தியா’ கூட்டணி தலைவர்கள்!

post-img

டெல்லி: ‛இந்தியா' கூட்டணி கட்சி தலைவர்கள் சென்னையை நோக்கி படையெடுத்து வர உள்ளனர். அதாவது இன்று டெல்லியில் நடந்த அந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இதுபற்றி முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ள நிலையில் பின்னணி குறித்த முக்கிய தகவலை டிஆர் பாலு எம்பி விளக்கி உள்ளார்.


நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் முயற்சியாக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்பட 26 கட்சிகள் இணைந்து ‛‛இந்தியா'' என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்த கூட்டணியின் 3 ஆலோசனை கூட்டங்கள் நடந்து முடிந்துள்ளன.


சமீபத்தில் மும்பையில் ‛‛இந்தியா'' கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டம் நடந்து முடிந்தது. இந்த கூட்டத்தல் "இந்தியா" கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு, பிரசார குழு, வலைதள குழு உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டன. இந்த குழுக்களில் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சியினரும் இடம்பெற்றுள்ளன.


இந்த ஒருங்கிணைப்பு குழுவில் மொத்தம் 13 பேர் இடம்பெற்றுள்ளனர். காங்கிரஸ் சார்பில் கேசி வேணுகோபால், திமுக சார்பில் டிஆர் பாலு, தேசியவாத காங்கிரஸ் சார்பில் சரத்பவார், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் அபிஷேக் பானர்ஜி, ஜார்கண்ட் முதல்வரும் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஹேமந்த் சோரன், சிவசேனா உத்தவ் அணியின் சஞ்சய் ராவத், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தேஜஸ்வி சூர்வா இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் டி ராஜா உள்பட மொத்தம் 13 பேர் உள்ளனர்.
இந்நிலையில் தான் ‛‛இந்தியா'' கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம் இன்று டெல்லியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இல்லத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் திமுக எம்பி டிஆர் பாலு உள்பட ‛இந்தியா' கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் கூட்டணியின் எதிர்கால திட்டங்கள் குறித்து பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன.


இந்த கூட்டத்துக்கு பிறகு திமுக எம்பியும், திமுக மக்களவை குழு தலைவருமான டிஆர் பாலு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்த கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அபிசேக் பானர்ஜி மட்டும் பங்கேற்கவில்லை. தொகுதி பங்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

இதுதவிர ‛இந்தியா' கூட்டணி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மிக முக்கியமான முடிவு என்பது நடைபெற உள்ள மாநிலங்களுக்கான தேர்தல் (சட்டசபை), லோக்சபா தேர்தல் இதில் எதுவாக இருந்தாலும் சரி அதற்கான பூர்வாங்க பணிகளை அந்ததந்த மாநிலத்தில் உள்ள கட்சிகள் இணைந்து செய்ய வேண்டும். மாநிலத்தில் என்ன முடிவு எடுக்கப்படும்? என்பது பற்றி விளக்கமாக ‛இந்தியா' கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. அதன்பிறகு முடிவு எடுத்து பேச வேண்டும் கோரிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.


மேலும் ‛இந்தியா' கூட்டணி சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி முதல் பொதுக்கூட்டம் என்பது மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டம் அக்டோபர் முதல் வாரத்தில் நடக்கும். தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அக்டோபர் 2 அல்லது 3 தேதியில் பொதுக்கூட்டம் இருக்கும். இதுபற்றி அறிவிப்பு மிக விரைவில் இருக்கும். இதில் ‛இந்தியா' கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.


அதன்பிறகு பாட்னா, நாக்பூர், கவுஹாத்தி, டெல்லி, சென்னையில் ‛இந்தியா' கூட்டணியின் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு உள்பட பிற பிரச்சனைகளை பற்றி பேச உள்ளோம். ஒவ்வொரு கூட்டத்திலும் 2 அல்லது 3 முக்கிய பிரச்சனைகளை டாபிக்காக வைத்து ‛இந்தியா' கூட்டணி கட்சி தலைவர்கள் பேச உள்ளனர்.

 

Related Post