குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்குவதற்கான பணிகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் நிலையில், இதற்கான விண்ணப்பப் படிவம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சட்டசபைத் தேர்தலில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும் என்பதை திமுக கடந்த தேர்தல் வாக்குறுதியாகவே இருந்தது. இதற்குப் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது.
திமுக ஆட்சி அமைந்தது இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இத்திட்டம் குறித்து பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். ஏற்கனவே, வரும் செப். 15ஆம் தேதி முதல் இந்தத் திட்டம் தொடங்கப்படும் என்று இந்தாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே நேற்றைய தினம் மாவட்ட கலெக்டர்கள் உடன் இத்திட்டம் குறித்து முதல்வர் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து இத்திட்டத்தில் யார் எல்லாம் வருவார்கள், யார் எல்லாம் தகுதி பெற மாட்டார்கள் என்பது குறித்த அறிவிப்பும் வெளியானது.
இதற்கிடையே மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பப் படிவம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் ஆதார் எண், குடும்ப அட்டை எண் உட்பட 13 வகையான கேள்வி கேட்கப்பட்டுள்ளது. மேலும், 18 வயதிற்கு மேல் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன
ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ்புக் ஆவணங்கள் தேவை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.