அதிமுக or பாஜக or நாம் தமிழர்.. விஜய் யாருடன் கூட்டணி வைக்கலாம்? சத்தியம் டிவி சர்வேயில் டிவிஸ்ட்

post-img
சென்னை: 2026 சட்டசபை தேர்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் யாருடன் கூட்டணி வைக்கலாம் என்ற கேள்விக்கு சத்தியம் டிவி சர்வேயில் அதிமுக, பாஜக, நாம் தமிழர், காங்கிரஸ் கட்சிகளை விட தனித்து போட்டியிட வேண்டும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் வரும் 2026ல் மீண்டும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட உள்ளது. தேர்தலை தமிழக வெற்றிக் கழகம் தனித்து சந்திக்கிறதா? இல்லை கூட்டணியாக சந்திக்கிறதா? என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால் நடிகர் விஜய் கூட்டணி அமைத்து போட்டியிட காய்களை நகர்த்தி வருகிறார். குறிப்பாக திமுக கூட்டணியில் உள்ள கட்சிகயை தன்பக்கம் இழுக்க விஜய் திட்டமிட்டு வருவதாகவும், குறிப்பாக திருமாவளவனை இழுத்து கூட்டணி வைக்க வேண்டும் என்று விஜய் கருதுவதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் 2026 சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு மக்களிடம் ஆதரவு எப்படி உள்ளது? என்பது பற்றி சத்தியம் டிவி சார்பில் மெகா சர்வே மேற்கொள்ளப்பட்டது. இந்த கருத்து கணிப்பில் விஜய் கூட்டணி வைத்தால் யாருடன் வைக்கலாம்? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அதிமுக என்று 25 சதவீதம் பேர் கூறியுள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக சீமானின் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என்று 11 சதவீதம் பேரும், பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம் என்று 9 சதவீதம் பேரும், காங்கிரசுடன் கூட்டணி வைக்கலாம் என்று 8 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர். அதேவேளையில் சர்வேயேில் பங்கேற்றவர்களில் 47 சதவீதம் பேர் தனித்து போட்டியிட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். சத்தியம் டிவியின் இந்த சர்வே என்பது மொத்தமுள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் சென்று சர்வே மேற்கொள்ளப்பட்டுள்ளது. நவம்பர் 15 தொடங்கிய சர்வே 21 நாட்கள் நடந்தது. இந்த சர்வேயை பத்திரிகையாளர்கள், மாணவர்கள் என்று 110 பேர் மேற்கொண்டனர். அனைத்து தரப்பு மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்ட நிலையில் அந்த சர்வேயின் முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Related Post