இதுவரை மனிதன் உருவாக்கிய தொழில்நுட்பங்கள் பல, மனிதகுலத்தைச் சிறப்பாக முன்னேற்றியதோடு, அவற்றுக்கே உண்டான பாதகங்களையும் கொண்டிருந்தன. அந்த வகையில், இப்போது நம்மை ஆச்சர்யங்களால் நிறைத்து, ஆபத்துகளால் பதறவைக்கிறது, `செயற்கைத் நுண்ணறிவு’ என்று சொல்லப்படும் ஏ.ஐ. (Artificial Intelligence).
மருத்துவத்துறை முதல் கலைத்துறை வரை எல்லா இடங்களிலும் பல அசாத்தியங்களைச் செய்திருக்கும் செயற்கைத் தொழில்நுட்பம், இதுவரை இல்லாத வகையில் ஏற்படுத்தியிருக்கும் அச்சத்துக்குக் காரணம், கிட்டத்தட்ட இது மனிதனைப் போலவே சிந்திக்கும் அளவுக்கு உருவாக்கப்பட்டுக் கொண்டிருப்பதுதான்! அந்தச் சிந்தனை, அதற்குத் தரப்படும் உள்ளீடுகளின், புள்ளியியல்களின், தரவுகளின் வெளிப்பாடாக இருக்கும் எனும்போது வினை விதைத்து, வினை அறுக்கக்கூடிய ஆபத்துத்தன்மை கொண்டதாகிறது.
உதாரணமாக, டீப்ஃபேக் (Deepfake) தொழில்நுட்பம். சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் முதல் நாடுகளின் தலைவர்கள், அரசியல்வாதிகள், சாதிச் சங்கத்தினர் வரை அவர்களின் உருவத்தை, குரலைப் பயன்படுத்தி, சமுதாயத்தில் பிளவை, சண்டையை, கலவரத்தை ஏற்படுத்தும்விதமாக அவர்கள் பேசும் காணொளிகளைப் பொய்யாக உருவாக்கி, உலகத்தையே போர்க்காடு ஆக்கும் அபாயம் இந்தத் தொழில்நுட்பத்தில் இருக்கிறது.
தவறான வாட்ஸ்அப் ஃபார்வேர்டுகளைக்கூட சத்திய வாக்காக நம்பும் நம் மக்கள், 100% துல்லியமான ஏ.ஐ காணொளிகளை 100% நம்புவார்கள். அதற்கு வினையாற்றுவார்கள். சமூகவிரோதிகள், மோசடிக்காரர்களின் நோக்கம் நிறைவேறுவதில் எந்தத் தடையும் இருக்காது.
`ஏ.ஐ-யின் காட்ஃபாதர்’ என்று அழைக்கப்படும் ஜெஃப்ரி ஹின்டன், இப்போது தானே அதற்கு எதிராக நிற்கிறார். அதற்கு, `சாட்ஜிபிடி (ChatGPT) போன்ற தொழில்நுட்பத்தால் இணையம் முழுக்கத் தவறானவை பெருகும், எது உண்மை என்று அறிந்துகொள்ள முடியாமல் போகலாம்; ஏ.ஐ டூல்கள் நாம் எதிர்பார்ப்பதற்கும் மேலாக மனிதனின் வேலைகளை அபகரித்துக்கொள்ளும்; சேமிக்கப்படும் அளவில்லாத தரவுகள் (Data) தவறாகப் பயன்படுத்தப்படக்கூடிய ஆபத்து இருக்கிறது' என மூன்று காரணங்களை முன்வைக்கிறார். .
அடுத்து, `ஆப்பிள்' கோ ஃபவுண்டர் ஸ்டீவ் வாஸ்னியாக், `டெஸ்லா' ஃபவுண்டர் எலான் மஸ்க் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில்நுட்பத் தலைவர்களும், ஆராய்ச்சியாளர்களும், ஏ ஐ ஏற்படுத்தவிருக்கும் ஆபத்தான சவால்களைக் கருத்தில்கொண்டு, ஆராய்ச்சிகளை ஆறு மாதங்களுக்கு நிறுத்திவைக்கக் கோரி, கடந்த மாதம் திறந்த கடிதத்தில் கையெழுத்திட்டனர். அதுவே, உலகம் முழுக்க திகிலைக் கிளப்பிவிட்டிருக்கிறது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், `கூகுள்' தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை மற்றும் `மைக்ரோசாஃப்ட்' தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெள்ள ஆகியோரைக் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவசரம் அவசரமாகச் சந்தித்திருப்பது, கவலையை மேலும் அதிகரிக்கச் செய்திருக்கிறது.
கடிவாளம் நம் கையில் இல்லாவிட்டால், எதுவுமே ஆபத்தானதுதான்!