சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்டம் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை, 3000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆதார ஆவணங்களும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டம் வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை, உச்ச நீதிமன்ற உத்தரவின் படி ஐந்து நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
கடந்த ஏழாம் தேதி முதல் இன்று வரை காவலில் வைத்து விசாரிக்கப்பட்ட செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறை காவல் முடிவடைந்ததை அடுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டார். பின்னர் அவர் காவல்துறையினர் பாதுகாப்போடு நீதிபதி அல்லியின் அறைக்கு கொண்டு சென்று ஆஜர் படுத்தப்பட்டார்.
அப்போது, போலீஸ் காவலின் போது அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் துன்புறுத்தினார்ளா? என கேட்டதற்கு தான் துன்புறுத்தப்படவில்லை என செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
அவரை மீண்டும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக 120 பக்க குற்ற பத்திரிகை கொண்ட 3000 பக்க ஆதார ஆவணங்கள் டிரங்க் பெட்டியில், அமலாக்கத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.
இதைத்தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அடுத்த வாரத்தில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்ய இருப்பதாக அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.