பல ஆயிரம் கோடி.. வருமான வரித்துறையையே ஆடிப்போக வைத்த பிரம்மாண்ட திருமணங்கள்.. சிக்கும் நிறுவனங்கள்

post-img
டெல்லி: இந்தியாவில் அண்மைக்காலங்களில் கோடீஸ்வரர்களின் திருமணங்கள் மிக பிரம்மாண்டமாக நடைபெறுகின்றன. எண்ண எண்ண ஐட்டங்களோ என்று எண்ணவே முடியாத அளவிற்கு உணவு வகைகளும், திரைப்படங்களை மிஞ்சும் வகையில் நடன நிகழ்ச்சிகளும், உலகத்தரத்திலான நட்சத்திர விடுதிகளில் உபசரிப்பும் நடக்கிறது. இதற்கு செலவு செய்யப்படும் பல கோடி பணம் கருப்பு பணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக ராஜஸ்தானை சேர்ந்த நிறுவனம் உள்பட 20 நிறுவனங்களிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்தி வருகிறது. திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக சொல்வார்கள்.. ஆனால் சொர்க்கம் இப்படித்தான் இருக்கும் என்று யாருக்கும் தெரியாது.. சொர்க்கமே திருமணத்தில் இருக்கிறது என்பது போல் திருமண விழாக்கள் நடைபெறுகின்றன. திருமணத்தை நான்கு நாட்கள் விழாவாக பல கோடீஸ்வரர்கள் நடத்துகிறார்கள். அவர்கள் நடத்தும் திருமண மண்டபங்களின் ஒரு வாடகையில் ஒரு குடும்பம் தன் வாழ்நாளில் முழுக்க தங்க முடியும். அதேபோல் அவர்கள் திருமணம் நடக்கும் அன்று அணியும் மணமகள் அல்லது மணமகன் உடைக்கு செலவு செய்யும் பணத்தை வைத்து ஒருவர் தான் வாழ்நாள் முழுவதும் உடை வாங்கி கொள்ள முடியும். திருமண விழா நடைபெறும் நான்கு நாட்களில் செலவு செய்யும் வாணவேடிக்கை பட்டாசுகளின் செலவு என்பது பல லட்சங்களை தாண்டும். திருமணத்தை முடிவு செய்துவிட்டால், பந்தகால் நடுவதற்கு, திருமணத்திற்கு, ரிசப்சனுக்கு, சங்கீத்திற்கு என நான்கு நாட்களுமே வகை வகையான விருந்துகள் வைத்து உறவினர்களை மகிழ்விப்பார்கள். அந்த ஒவ்வாரு நாள் உணவும், ஓரிரு ஐட்டங்கள் இல்லை. 100 ஐட்டங்கள் முதல் 200 ஐட்டங்கள் வரைகூட கோடீஸ்வரர்களின் திருமணங்களில் இருக்கும்.. அடுத்ததாக திருமண மண்படங்களில் செயற்கை நீரூற்று, வெண்மேக பஞ்சு போன்ற புகை, சினிமாக்களில் வருவது பேன்ற உள்அரங்க அலங்காரம், இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மலர்கள், கார் ஊர்வலம், குதிரை ஊர்வலம் என கோடிகளை தாண்டும். இதேபோல் சினிமா படம் பாணியில் புகைப்படம் வீடியோ எடுக்க கலைஞர்கள், நயன்தாரா விக்னேஷ் சிவன் கல்யாணத்தை எப்படி எடுத்தார்களோ அதுபோல் ஆவணப்படமாக எடுப்பார்கள். அதற்கு செலவு மட்டுமே பல லட்சங்கள் ஆகும். அதேபோல் திருமணம் நடைபெறும் அன்று ஒரு நாள் மட்டும் உணவு வகைகளை பார்த்தால், இவ்வளவு உணவில் ஒரு கைப்பிடி என்று சாப்பிட்டால் கூட சாப்பிட முடியாது என்பது போல் 100 வகை உணவுகள் இடம் பெற்றிருக்கும். இளநீரில் ஆரம்பித்து, ஐஸ்கிரீமில் முடியும் வகையில் பப்பே சிஸ்டத்தில் உணவுகள் இடம் பெற்றிருக்கும். அந்த உணவுகள் எல்லாம் இந்தியாவின் புகழ்பெற்ற உணவுக் கலைஞர்களால் செய்யப்பட்டவையாக இருக்கும். காய்கறிகள், கறிகள், தண்ணீர் உள்பட எல்லாமே இறக்குமதி செய்யப்பட்டவையாக இருக்கும். உதாரணத்திற்கு சிறுவாணி தண்ணீர் தான் சுவையாக இருக்கும் என்றால், அந்த தண்ணீரை பல ஆயிரம் லிட்டர் அளவிற்கு கொண்டு செல்வார்கள். இப்படி உணவுகளுக்காக செலவு செய்யப்படும் தொகை எத்தனை லட்சம் என்பதை யோசிக்கவே முடியாது. இப்படி திருமணங்கள் எப்போதோ யாருக்கோ நடைபெறும் என்கிற நிலை தான் இருந்தது. ஆனால் குறிப்பிட்ட திருமணங்கள் எல்லாம் இப்போது நடுத்தர மற்றும் உயர் நடுத்தர மற்றும் கோடீஸ்வரர்களின் வீடுகளில் இப்போது சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. தென்சென்னையில் உள்ள புகழ் பெற்ற திருமண மண்டபத்தின் ஒரு நாள் வாடகையே பல லட்சம் ஆகும். சரியான புள்ளி விவரம் சொன்னால் மலைத்து போக வைக்கும். இங்கு திருமணம் செய்ய வேண்டும் என்றால், அவ்வளவு எளிதானது அல்ல. அதற்கு தவமே இருக்க வேண்டும். அப்படி திருமண மண்டபங்கள் எல்லாம் இருக்கிறது. சென்னை மட்டுமல்ல, மும்பை, ஜெய்ப்பூர், பெங்களூர், அஹமதாபாத், புனே, நாக்பூர், சண்டிகர், கொல்கத்தா, ஹைதராபாத், விஜயவாடா, விசாகப்பட்டினம், கோவை உள்பட இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் கோடீஸ்வர்களின் திருமணங்கள், நடிகர்-நடிகைகளின் திருமணங்கள் இப்படித்தான் இருக்கின்றன. நடிகர் நடிகைகளின் திருமணங்களில் கூடுதலாக விமானத்தில் அல்லது ஹெலிகாப்படரில் கூட வரவேற்பு இருக்கும். கடற்கரையோரங்களில், பிரமாண்ட சொகுசு கப்பல்களில் திருமணங்கள் நடப்பது அதிகரித்துள்ளது. திருமணங்கள் என்பது தங்களது ஆடம்பரத்தையும் தங்களது கௌரவம் மற்றும் தகுதியையும் வெளிப்படுத்தும் விஷயமாக பார்க்கிறார்கள். இதனால் திருமணங்கள் கோடி கோடியாய் கொட்டி நடக்கிறது. அண்மைக் காலங்களில் இப்படி பல திருமணங்கள் நடக்கின்றன. இந்த பிரமாண்ட திருமணங்களை வருமான வரித்துறை கண்காணிக்க தொடங்கி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில்தான் இதுபோன்ற பிரமாண்ட திருமணங்கள் அதிகம் நடைபெற்று வருகிறது.ஜெய்ப்பூரை சேர்ந்த பிரமாண்ட திருமண நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனங்களில் 20 முன்னணி நிறுவனங்களிடம் வருமான வரித்துறை தற்போது விசாரணையை தொடங்கியுள்ளது. இதுபோன்ற பிரமாண்ட திருமணங்கள் மூலம் கணக்கில் வராத ரூ.7,500 கோடி பணம் கடநத் ஓராண்டில் புழக்கத்துக்கு வந்துள்ளதாக கூறப்படுவதால் விசாரணை தீவிரமாக நடக்கிறது.

Related Post