ஜெயம் ரவிக்கு ஜோடியான தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் மகள்.. யார் இந்த தவ்தி ஜிவால்?

post-img
சென்னை: நடிகர் ஜெயம்ரவியின் 34வது திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் நடிக்க உள்ளார். நடிகர் ஜெயம் ரவி இதுவரை 33 திரைப்படங்களில் நடித்துள்ளார். அவரது 34 வது திரைப்படத்தின் பூஜை சென்னையில் நடந்தது. இந்த திரைப்படத்தை நடிகர் கவினை வைத்து படம் இயக்கிய டாடா இயக்குனர் கணேஷ் பாபு இயக்குகிறார். இந்த படம் வடசென்னையை மையப்படுத்தி உருவாக உள்ளது. படத்தை ஸ்கிரீன் சீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. ஜெயம் ரவியின் 34வது திரைப்படம் என்பதால் JR 34 என்று அழைக்கப்படுகிறது. இந்த படத்துக்கு இயக்குநர் கணேஷ் பாபுவுடன் சேர்ந்து ‛மேயாத மான்' படத்தின் இயக்குநரான ரத்ன குமார் திரைக்கதை எழுதியுள்ளார். இவர் இதற்கு முன்பு லோகேஷ் கனகராஜுடன் சேர்ந்து மாஸ்டர், லியோ, விக்ரம் உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை எழுதியிருந்தார். அந்த படங்கள் ஹிட் அடித்த நிலையில் ஜெயம் ரவியின் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தவ்தி ஜிவால் நடிக்கிறார். இவர் யார் என்றால் தற்போதைய தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் ஆவார். சங்கர் ஜிவால் மகள் தவ்தி ஜிவால் தமிழ் திரைப்படத்தில் அறிமுகம் ஆகிறார் என்று நீண்ட நாட்களாக தகவல்கள் பரவி வந்தது. குறிப்பாக டாடா திரைப்பட இயக்குநர் கணேஷ் பாபு தான் அவரை அறிமுகம் செய்கிறார் என்ற தகவலும் வெளியானது. நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரமுடன் கணேஷ் பாபு ஒரு படத்தை இயக்குவதாகவும், அதில் தவ்தி ஜிவால் அறிமுகம் செய்யப்படுவதாகவும் கூறப்பட்டது. ஆனால் அந்த படப்பிடிப்பு தள்ளிப்போனது. அதன்பிறகு நடிகர் ஜீவாவை வைத்து கணேஷ் பாபு இயக்குவதாக கூறப்பட்ட படத்தில் தவ்தி ஜிவால் அறிமுகம் செய்யப்படுகிறார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது ஜெயம் ரவி படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் தவ்தி ஜிவால். இந்த படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஜெயம் ரவியின் தாம் தூம், எங்கேயும் காதல், வனமகன் மற்றும் பிரதர் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து ஹாரிஸ் ஜெயராஜ் 5வது முறையாக ஜெயம் ரவியுடன் இணைகிறார்.

Related Post