புதுச்சேரி: புதுச்சேரி வீராம்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள், விசைப்படகில் சென்று ஆழ்கடலில் மீன்பிடித்தபோது ஒன்றரை டன் எடையுள்ள ராட்சத திருக்கை மீன் சிக்கியது. அந்த மீனை படகில் தூக்கி போடமுடியவில்லை.. மிகவும் கஷ்டப்பட்டு படகில் கட்டி மீனவர்கள் இழுத்து வந்தனர். மீனை அவர்கள் வெட்டியபோது அதன் வயிற்றில் 50-க்கும் மேற்பட்ட சிறிய வகை மீன்கள் இருந்தது.
மீனவர்களுக்கு ராட்சத மீன்கள் அவ்வப்போது மட்டுமே கிடைக்கும். அதேநேரம் சில மீன்கள் கிடைப்பது என்பது மிகவும் அபூர்வமாக நடக்கிறது. அப்படித்தான் புதுச்சேரி மீனவர்களுக்கு ஆயிரத்து 500 கிலோ எடையுள்ள மீன் கிடைத்துள்ளது. அதாவது திமிங்கலம் சைஸ்க்கு மீன்கள் கிடைத்திருக்கிறது..
புதுச்சேரி வீராம்பட்டினம் பகுதியை சேர்ந்த மோகன்தாஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 10 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார்கள். ஆழ்கடலில் வலையை வீசி மீன்பிடித்து கொண்டிருந்தார்கள். அப்போது வலையில் பெரிய அளவில் ஏதோ ஒன்று சிக்கியதுபோல் அவர்கள் உணர்ந்தனர்.
வலையை இழுத்து பார்த்தபோது பெரிய அளவிலான கொம்பன் திருக்கை மீன் சிக்கியிருப்பது தெரியவந்தது. அந்த மீனை எப்படியாவது படகில் எடுத்து போட முயன்றுள்ளார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் சேர்ந்து இழுத்த போதிலும், படகில் தூக்கிப்போட முடியவில்லை.. எடை அதிகமாக இருந்ததால் அவர்களால் படகில் இழுத்து போட முடியாத நிலை இருந்தது.
இதையடுத்து புதுச்சேரி மீனவர்கள் வலையை படகில் கட்டி மீனோடு இழுத்து கொண்டு தேங்காய்திட்டு துறைமுகத்துக்கு வந்தார்கள். இருந்தபோதிலும் அந்த மீனை கரைக்கு கொண்டு வர முடியாத நிலை இருந்தது. இதனால் மீன் ஏற்ற வந்த வேனில் கயிறை கட்டி மீனை கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அந்த கொம்பன் திருக்கை மீன் சுமார் 1.5 டன் எடை கொண்டதாக இருந்தது. பின்னர் அதனை வியாபாரிகள் துண்டு, துண்டாக வெட்டி கேரளாவுக்கு அனுப்பி வைத்தார்கள். மீனை அவர்கள் வெட்டியபோது அதன் வயிற்றில் 50-க்கும் மேற்பட்ட சிறிய வகை மீன்களை விழுங்கியிருந்தது தெரிய வந்தது. புதுச்சேரியில் 1500 கிலோ எடையுள்ள மீன் வலையில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Weather Data Source: Wettervorhersage 21 tage