திருவண்ணாமலை: திருவண்ணாமலை தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு 90 நாள்களே ஆன நிலையில் சாத்தனூர் பாலம் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. எடுத்தேன், கவிழ்த்தேன் என்று பாலத்தைக் கட்டி மக்களின் பணத்தை வீணடித்துள்ளனர் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் பெஞ்சல் புயலின் கோர தாண்டவத்தால் திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடுமையாக சேதங்கள் ஏற்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கின. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் நிலச் சரிவு காரணமாக 7 பேர் மண்ணுக்குள் புதைந்தனர்.
தங்கள் உடைமைகள் அனைத்தையும் பொதுமக்கள் இழந்துள்ளனர். இந்நிலையில், திருவண்ணாமலையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு, திறக்கப்பட்டு 90 நாள்களே ஆன பாலம் அடித்துச் செல்லப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஒன்றியத்தில் சாத்தனூர் அணை உள்ளது.
பெஞ்சல் புயல் காரணமாக பெய்த பலத்த மழையால் சாத்தனூர் அணையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாத்தனூர் அணையில் இருந்து கடந்த திங்கள்கிழமை சுமார் 1 லட்சத்து 75 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தண்டராம்பட்டு அருகே உள்ள அகரம் பள்ளிப்பட்டு, தொண்டமானூர் கிராமத்தை இணைக்கும் உயர்நிலைப் பாலம் நீரில் அடித்துச் செல்லப்பட்டது.
இந்தப் பாலம் கடந்த செப்டம்பர் மாதம் திறக்கப்பட்டது. 15.90 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த நெடுஞ்சாலைப் பாலம் சுமார் 7 மீட்டர் உயரம், 12 மீட்டர் அகலம், 250 மீட்டர் நீளம் கொண்டதாகும். புதிதாகக் கட்டப்பட்டு 90 நாட்களுக்குள்ளேயே 16 கோடி ரூபாய் பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தி.மு.க ஆட்சியில் கட்டப்படுகிற பாலங்கள் எவ்வளவு தரமற்றுக் கட்டப்படுகிறது என்பதற்கு இந்த நிகழ்வே சாட்சி" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். ரூ. 16 கோடி செலவில் கட்டி திறக்கப்பட்டு 90 நாட்களே ஆன நிலையில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலத்தை எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: டிசம்பர் 2 ஆம் தேதி திருவண்ணாமலை, தென்பெண்ணை ஆற்றில் 2 லட்சம் கன அடி நீர் சென்றது. இந்நிலையில், தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த புதிய பாலம் தண்ணீரால் அடிச்சுச் செல்லப்பட்டது. 16 கோடி ரூபாயில் இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. பாலம் கட்டும்போதே நீர்வளத் துறை அதிகாரிகள் பாலத்தின் உயரத்தை அதிகப்படுத்த வேண்டும் என்றும், பாலத்தில் தூண்களை அதிகப்படுத்த வேண்டும் என்றும் கருத்து கூறியுள்ளனர்.
ஆனால், அதனை கவனத்தில் கொள்ளாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்கிற நிலையில் பாலத்தைக் கட்டியுள்ளனர். அவசரக் கோலத்தில் பாலத்தைக் கட்டியதன் விளைவாக அதிக வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. 1972 ஆம் ஆண்டே 2 லட்சத்து 40 ஆயிரம் கன அடி நீர் சென்றுள்ளது. அதற்கேற்ப பாலத்தைக் கட்டியிருந்தால் இந்த சேதத்தை தவிர்க்கலாம். முழுக்க முழுக்க அரசின் கவனக் குறைவால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது என்றார்.
Weather Data Source: Wettervorhersage 21 tage