நடிகர்கள் அரசியல் வருகை.. தக் லைஃப் ரிப்ளை கொடுத்த முதலமைச்சர் முக ஸ்டாலின்

post-img
கோவை: கோவை மாவட்டத்துக்கு வருகை புரிந்த முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேட்ட கேள்விக்கு, நன்றாக பார்க்கிறேன் என்று சிரித்தபடி பதிலளித்தார். கோவை மாவட்டம், சுங்கம் பகுதியில் மறைந்த முன்னாள் எம்பி இரா.மோகன் இல்லத்தில் அவரது குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கோவைக்கு வருகை புரிந்தார். கடந்த 10 ஆம் தேதி இரா. மோகன் உயிரிழந்த நிலையில் அன்றைய தினம் துணை முதல்வர் உதயநிதி நேரில் வந்து அஞ்சலி செலுத்தியிருந்தார். இந்நிலையில், ஈரோட்டில் இரண்டு நாள் கள ஆய்வுக்கு வந்திருந்த முதல்வர் சென்னை திரும்பும் முன் கோவையில் மோகன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். முதல்வர் வருகையை ஒட்டி சுங்கம் பகுதியில் பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முன்னாள் எம்பி இரா.மோகன் திமுகவில் பல முக்கிய பொறுப்புகளை வகுத்திருந்தார். 1980 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மோகன், 1989 ஆம் ஆண்டு சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். திமுகவின் மூத்த உறுப்பினராக இருந்த மோகன் கடந்த ஏழு வருடங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் டிசம்பர் 10 ஆம் தேதி அதிகாலை உயிரிழந்தார். இரங்கல் தெரிவித்த பின்னர் முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் திமுகவின் தூணாக விளங்கியவர். சாதாரண பொறுப்பில் இருந்து, சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினராக கழகத்திற்கு பணியாற்றியவர். அவரது மறைவு திமுகவிற்கு இழப்பு.அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காக வந்துள்ளேன். ஈரோடு மாட்டத்தில் கள ஆய்வு நடத்தியுள்ளேன். கள ஆய்வை பொறுத்தவரையில் இன்னும் வேகமான வகையில் உற்சாகமாக பணியாற்ற உதவுகிறது. ஈரோட்டின் கள ஆய்வுக்கு பின்பு வரக்கூடிய 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 என்ற இலக்கினை தாண்டி எண்ணிக்கை கூடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தி அவர் மீதான வழக்கை சட்டப்படி சந்திப்பார். ஈரோடு கிழக்கு திமுக கூட்டணி வசமாகும். இந்தியா கூட்டணி வசமாகும். ஈரோடு கிழக்கு தொகுதியில் யார் போட்டி என்பதை கலந்து பேசி முடிவு செய்வோம். ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரு கொடுமையான சட்டம். ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளும் மோசமான செயல். இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசித்து அம்பேதகர் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும். நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, நன்றாக பார்க்கிறேன் என சிரித்தபடி பதிலளித்தார்.

Related Post