முகமது அலி ஜின்னாவால் வீழ்ந்த அத்வானி.. அம்பேத்கரால் 'சுய சூனியம்' வைத்துக் கொண்ட அமித்ஷா!

post-img
டெல்லி: மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு தலைமை வகிக்கும் பாஜகவை உருவாக்கிய நிறுவனத் தலைவர்களில் ஒருவரான அத்வானி, முகம்மது அலி ஜின்னாவை புகழ்ந்து பேசியதால் அரசியல் உலகில் அஸ்தமனமாகிப் போனார்; அதேபோல இன்று அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்திப் பேசியதால் பாஜகவின் 'சாணக்கியரான' 'இரும்பு மனிதரான' மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உச்சகட அரசியல் நெருகக்டியை எதிர்கொண்டிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ். என்கிற இந்துத்துவா இயக்கம் காலந்தோறும் பல்வேறு அரசியல் குழந்தைகளை உலவ விட்டிருக்கிறது. இந்து மகாசபை, ஜன சங்கம் தொடங்கி இன்றைய பாரதிய ஜனதா வரை பல்வேறு அவதாரங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. பாரதிய ஜனதா கட்சி என்ற இன்றைக்கு இந்தியாவையே 3-வது முறையாக கட்டி ஆளுகிற கட்சியை உருவாக்கியவர்கள் 2 பேர். ஒருவர் அடல் பிகாரி வாஜ்பாய்; மற்றொருவர் லால்கிஷன் அத்வானி. பாஜகவின் இரு பெரும் தலைவர்கள் ஒருங்கிணைந்தே பயணித்ததால் இன்றைக்கு இத்தகைய விஸ்வரூப வளர்ச்சியை பாஜக பெற்றிருக்கிறது. மத்திய அரசாங்கத்தை பாஜக கைப்பற்றிய போது வாஜ்பாய் பிரதமராக, அத்வானி துணை பிரதமராகவும் பதவி வகித்தனர். வாஜ்பாய்-க்கு பிந்தைய காலத்தில் 2014-ம் ஆண்டு அத்வானிதான் பிரதமர் வேட்பாளராக கருதப்பட்டார். ஆனால் குஜராத் வன்முறையால் தம்மால் காப்பாற்றப்பட்ட நரேந்திர மோடியையே ஆர்.எஸ்.எஸ்-ம் பாஜகவும் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியது. அத்துடன் அத்வானி எனும் சகாப்தத்தின் அரசியல் வாழ்க்கையும் அஸ்தமனமாகிவிட்டது. இன்றைக்கும் அத்தனைக்கும் மவுன சாட்சியாகவே வாழ்வின் இறுதி நாட்களில் இருக்கிறார் அத்வானி. அத்வானியும் இரும்பு மனிதராக, 2-வது சர்தார் வல்லபாய் பட்டேலாகவே பாஜகவினரால் இந்துத்துவா சக்திகளால் கொண்டாடப்பட்டவர்தான். அப்படியான வல்லமை பெற்ற அத்வானியின் அரசியல் அத்தியாயம் ஏன் முடிந்து போனது? வாழ்நாள் கனவான பிரதமர் பதவி எட்டாக் கனியாகவே அத்வானிக்கு போனது எதனால்? ஒரே ஒரு காரணம்தான்.. பாகிஸ்தானுக்கு சென்ற அத்வானி, முகம்மது அலி ஜின்னாவை வானளாவ புகழ்ந்து பேசியிருந்தார். அதிதீவிர இந்துத்துவ சக்திகளுக்கு பாகிஸ்தானும் இஸ்லாமியர்களும் ஜின்னாவும் ஒவ்வாமை. அப்படி ஒவ்வாமை, ஜென்ம விரோதியான ஜின்னாவை எப்படி அத்வானி புகழ்ந்து பேசலாம் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ், பாஜகவின் அதிகாரக் குழுவுக்கு அதிர்ச்சியைத் தந்தது. நாக்பூர் முதல் டெல்லி வரை அத்வானி மீதான அதிருப்தி சுனாமி பேரலையாக எழுந்தது. ஜின்னா என்கிற மனிதரைப் பற்றி ஒரே ஒரு முறை புகழ்ந்து பேசியதால் அத்வானி என்கிற இரும்பு மனிதர்- 2வது சர்தார் வல்லபாய் பட்டேல் 'செல்லாக்காசு' நிலைக்கு தள்ளப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட கொடுமையை இந்த தேசமும் இப்போதும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. அதே நிலைமைதான் இன்றைக்கு அமித்ஷாவுக்கும் உருவாகிக் கொண்டிருக்கிறது.. இன்றைய பாஜகவின் சாணக்கியர்- இரும்பு மனிதர்- நவீன வல்லபாய் பட்டேல் என்ற புகழுரைகளுக்குச் சொந்தக்காரர் அமித்ஷாதான். பிரதமர் மோடி- அமித்ஷா இணையர் ஆட்சி என்றுதான் விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் ராஜ்நாத் சிங்குகளும் சிவராஜ்சிங் சவுகான்களும் நிதின் கட்காரிகளும் ஊடுருவ மோடிக்கு அடுத்தவர் அமித்ஷாவா இப்போது? என்கிற திரிசங்கு நிலைக்கு மெல்ல மெல்ல தள்ளப்பட்டுக் கொண்டே இருக்கிறார். அப்படியான ஊசலாட்ட சூழ்நிலையில்தான் அண்ணல் அம்பேத்கர் எனும் பெருநெருப்பின் மீது கையை வைத்து சூடு போட்டுக் கொண்டிருக்கிறார். இதோ அமித்ஷாவுக்கு மோடி வக்காலத்து வாங்குகிறார்.. பிரஸ் மீட்டில் 5 மத்திய அமைச்சர்கள் வருகிறார்கள்.. ஆனால் இவை எல்லாம் அமித்ஷா என்கிற ஆலமரத்தைத் தாங்கிப் பிடிக்க என்பது இன்றைக்குதான்.. இவை எல்லாம் அமித்ஷா என்கிற இன்றய இரும்பு மனிதரின் எதிர்காலம் அத்வானி போல ஆகிவிடலாம் என்பதற்கான எச்சரிக்கைதான்.. இந்த பதற்றத்தைத்தான் டெல்லி பிரஸ்மீட்டில் இந்த நாடே பார்த்துக் கொண்டிருந்தது என்பதை அமித்ஷா புரிந்து கொண்டால் சரி.. இனியேனும் சுயமாக சூனியம் வைக்காமல் 'சூதானமாக' இருக்க வேண்டியவர் அமித்ஷாதான்!

Related Post