திருவண்ணாமலை: பெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலையில் பலத்த மழை பெய்ததால், தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்ட புதிய மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்ட மூன்று மாதங்களிலேயே வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. இந்த சம்பவம் பெரும் விவதாத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் பெஞ்சல் புயலின் கோர தாண்டவத்தால் திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அண்மையில் கடுமையாக சேதங்கள் ஏற்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கின. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. திருவண்ணாமலையில் நிலச் சரிவு காரணமாக 7 பேர் மண்ணுக்குள் புதைந்தனர்.
பெஞ்சல் புயல் காரணமாக பெய்த பலத்த மழையால் சாத்தனூர் அணையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாத்தனூர் அணையில் இருந்து கடந்த தண்ணீர் திறந்து விடப்பட்டது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தண்டராம்பட்டு அருகே உள்ள அகரம் பள்ளிப்பட்டு, தொண்டமானூர் கிராமத்தை இணைக்கும் உயர்நிலைப் பாலம் நீரில் அடித்துச் செல்லப்பட்டது.
இந்தப் பாலம் கடந்த செப்டம்பர் மாதம் திறக்கப்பட்டது. 15.90 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த நெடுஞ்சாலைப் பாலம் சுமார் 7 மீட்டர் உயரம், 12 மீட்டர் அகலம், 250 மீட்டர் நீளம் கொண்டதாகும். புதிதாகக் கட்டப்பட்டு 90 நாட்களுக்குள்ளேயே 16 கோடி ரூபாய் பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
தி.மு.க ஆட்சியில் கட்டப்படுகிற பாலங்கள் எவ்வளவு தரமற்றுக் கட்டப்படுகிறது என்பதற்கு இந்த நிகழ்வே சாட்சி என்று பலரும் விமர்சித்திருந்தனர்.
இந்நிலையில், பாலம் ஆற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது குறித்து அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீர் நிலைகளில் பாலம் கட்டும்போது நீர்வளத் துறை பொறியாளர்கள். மழை வெள்ளம் ஒரு மணி நேரத்தில் எவ்வளவு கன அடி வருகிறது என்பதை கணக்கீடு செய்து பாலம் அமைக்கப்படுகிறது.
அதன் அடிப்படையில், 52 ஆயிரம் கன அடி தண்ணீர் வரும் என்று பாலம் அதற்கேற்றவாறு கட்டப்பட்ட நிலையில், எதிர்பாராத விதமாக இரண்டே கால் லட்சம் கன அடி தண்ணீர் வந்ததால் பாலம் அடித்துச் செல்லப்பட்டது.
ஆற்றுக்குள் கட்டப்படும் மேம்பாலத்துக்கும், சாலையில் கட்டப்படும் மேம்பாலத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. தரையில் கட்டப்படும் பாலம் வேறு, நீர்நிலைக்குள் கட்டப்படும் பாலத்தின் விதம் வேறு. தண்ணீர் திறந்து விடப்படுவதை கணக்கில் கொண்டு தான் ஆற்றுக்குள் மேம்பாலங்கள் கட்டப்படுகின்றன.
மழை காரணமாக அதிக அளவு நீர் வந்ததால் சேதமடைந்துள்ளது. இதனால், ஆற்றுக்குள் அடித்துச் செல்லப்பட்ட பாலம் தரம் இல்லாமல் கட்டப்பட்டது என்று அர்த்தம் இல்லை. எதிர்பாராத விதமாக இதுபோன்ற ஆற்றுப்பாலங்கள் நீரில் அடித்துச் செல்லப்படும் சம்பவங்கள் ஏற்படுகின்றன.
கலைஞர் நூற்றாண்டு நூலகம் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்று நூலகத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தேன். இதுவரை 13 லட்சத்து 59 ஆயிரத்து 996 பேர் நூலகத்தை பயன்படுத்தி இருக்கின்றனர். நூலகத்தில் 3 தளங்கள் கொண்ட கூடுதல் கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மதுரை கோரிப்பாளையத்தில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலப் பணிகள் 2025 டிசம்பர் மாதத்திற்குள் முடிவந்துவிடும். தற்போது 25 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன என்றார்.