சென்னை: ஆண் குழந்தைகளுக்கான வரப்பிரசாதமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது பொன்மகன் சேமிப்பு திட்டம்.. இந்த திட்டத்தில் வழங்கப்படும் வட்டிவிகிதங்கள் எவ்வளவு தெரியுமா?
சிறுசேமிப்பு திட்டங்கள் எப்போதுமே பாதுகாப்பானது.. ஓரளவு அதிக வட்டி அளிக்ககூடியதுமாகும்.. தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் உள்ளன.. அதேபோல சில வங்கிகளும் நிரந்தர வைப்புக் கணக்குகளுக்கு கணிசமான வட்டியை அளிக்கின்றன.
அங்கீகாரம்: அரசு அங்கீகாரம் உள்ளதால் சேமிப்பும் பாதுகாப்பானவை.. அதனால்தான், மற்ற திட்டங்களை காட்டிலும், சிறு சேமிப்பு திட்டங்கள் அதிக வட்டி விகிதங்கள் மற்றும் கடன் வசதியை வழங்குவதால் பெரும்பாலான மக்கள் இந்த திட்டங்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்... இதில் ஒன்றுதான் பொன்மகன் பொதுவைப்பு நிதி திட்டமாகும்..
பெண் குழந்தைகளுக்கு சேமிக்க செல்வமகள் சேமிப்பு திட்டம் இருப்பதை போலவே, ஆண் குழந்தைகளுக்கும் செல்வ மகன் சேமிப்பு திட்டம் அமலில் இருந்து வருகிறது.. கடந்த செப்டம்பர் 2015-ல் தொடங்கப்பட்ட அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டமாகும். இந்த சிறுசேமிப்பு கணக்கை எப்படி துவங்குவது தெரியுமா?
தபால் நிலையங்கள்: தமிழகத்தில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் அதாவது, தமிழகத்தில் உள்ள தலைமை-துணை அஞ்சலகங்களில் மட்டுமே கணக்கை தொடங்க முடியும். தமிழகத்தில் மட்டும் 2 ஆயிரம் தலைமை-துணை அஞ்சலகங்களும், சென்னை மண்டலத்தில் 600-க்கும் மேற்பட்ட தலைமை-துணை அஞ்சலகங்கள் இருப்பதால், எளிதாகவே இந்த திட்டத்தில் இணையலாம்.
தேவையான ஆவணங்கள்: இந்த திட்டத்தில் இணைய வேண்டுமானால், விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும்.. குழந்தையின் பிறப்பு சான்றிதழ் மற்றும் பெற்றோர்/பாதுகாவலரின் அடையாளச் சான்று போன்ற தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.. ஆரம்ப வைப்புத்தொகை ரூ.500 இருக்க வேண்டும்.. கணக்கு திறக்கப்பட்டதுமே, குழந்தைக்கு பாஸ்புக் தந்துவிடுவார்கள்.
தகுதிகள் என்னென்ன: 10 வயதுக்குட்பட்ட மைனர் சிறுவனின் சார்பாக பெற்றோர் அல்லது பாதுகாவலர் (guardian) கணக்கைத் திறக்கலாம். ஆனால், பாதுகாவலர் உதவியோடு கணக்கை துவங்கலாம்.. இதுவே 10 வயதை பூர்த்திச் செய்திருந்தால் ஆண் குழந்தை தானாகவே பொன் மகன் சேமிப்புத் திட்டத்தில் கணக்கை துவங்கலாம். முதலில் பாதுகாவலர் உதவியுடன் கணக்கை துவங்கி, குழந்தைக்கு 10 வயதான பிறகு, குழந்தையின் பெயரிலேயே மாற்றம் செய்து கொள்ளலாம்.
ஒவ்வொரு மாதமும் இந்த திட்டத்தின் கீழ் குறைந்தது ரூ. 500 முதல் அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் வரைக்கும் முதலீடு செய்து கொள்ளலாம். இது மட்டுமில்லாமல் ஆண்டு வட்டியாக பொன்மகன் சேமிப்பு திட்டத்திற்கு 8.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
வட்டிவிகிதம்: மேலும், முதலீடு செய்த தொகையை படிப்பு செலவு அல்லது பிற செலவுகளுக்காக கணக்கு துவங்கப்பட்ட 15 வருடங்களுக்கு பிறகு வட்டியுடன் சேர்த்து பெற்றுக் கொள்ளலாம். சம்பாதித்த வட்டி உட்பட முழுத் தொகையும் மேஜர் ஆனவுடன் ஆண் குழந்தைக்கு வழங்கப்பட்டு விடும்.
முதிர்வு காலத்துக்குப் பின்பும் கணக்கு முடிக்கும் வரை உங்களுக்கு பிபிஎஃப் வட்டியே வழங்கப்படும். மொத்தத்தில், இந்த திட்டம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.