சென்னை: நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அமித்ஷாவுக்கு எதிராக தமிழ்நாட்டில் போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டடு 75 ஆனதன் நினைவாக, அரசியலமைப்பு தின விவாதம் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகள் இந்த விவாதத்தின் போது மத்திய அரசு மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தன.
அமித்ஷா பேசியது என்ன?: இதற்கு பதிலளித்து பேசிய அமித்ஷா, "அம்பேத்கர், அம்பேத்கர் என்று முழக்கமிடுவது இப்போது ஃபேஷனாகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும். அம்பேத்கரின் பெயரை காங்கிரஸ் எடுத்துக்கொள்வதில் பாரதிய ஜனதா கட்சி மகிழ்ச்சியடைகிறது. ஆனால் அவர் மீதான உண்மையான உணர்வுகள் குறித்தும் காங்கிரஸ் பேச வேண்டும்" என்று பேசியிருந்தார்.
அமித்ஷா விளக்கம்: தனது பேச்சு பெரும் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், அமித்ஷா இது குறித்து விளக்கமளித்திருந்தார். "எனது பேச்சை முழுமையாக கேளுங்கள். அதன்பின்னர் விமர்சிக்கலாம். ஆனால் நான் என்ன சொல்ல வந்தேன் என்பதை கேட்காமலேயே என் மீது விமர்சனங்கள் அடுக்கப்படுகின்றன. நாடாளுமன்றத்தில் நான் பேசியதை காங்கிரஸ் கட்சியினர் திரித்த கூறுகிறார்கள். அம்பேத்கரின் கொள்கைகளை உயர்த்தி பிடிப்பது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகதான். நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல. காங்கிரஸ்தான் அவருக்கு எதிரானது.
எனது பேச்சுக்கு ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். அவருக்கு அதுதான் நிம்மதியளிக்கும் எனில், ராஜினாமா செய்ய தயார். ஆனாலும் அடுத்த 15 ஆண்டுகளுக்கு அவர் எதிர்க்கட்சி வரிசையில்தான் அமர்ந்திருப்பார். காங்கிரஸின் குற்றசாட்டு குறித்து நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் உரிய நடவடிக்கை மேற்காள்ளப்படும்" என்று கூறியிருந்தார்.
போராட்டம்: ஆனால் அமித்ஷாவின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லாத எதிர்க்கட்சிகள், அமித்ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் இறங்கின. இன்று நாடாளுமன்ற வளாகத்தில் எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடு முழுவதும் காங்கிரஸ் அமித்ஷாவை பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தை நடத்தி வருகிறது. தமிழ்நாட்டில் திமுக போராட்டத்தை அறிவித்திருக்கிறது. இன்று காலை 11.30 மணியளவில் போராட்டத்தை திமுக தொடங்கியுள்ளது.
மறுபுறம் விசிக பல்வேறு இடங்களில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் விசிகவின் 100 பேர் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மாநில கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாணவர்கள் அமித்ஷாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.