வாஷிங்டன்: கனடா தனி நாடாக இருப்பதை விட அமெரிக்காவின் அங்கமாக மாறலாம். கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாற்றுவது நல்ல ஐடியாவாக இருக்கிறது என்று புதிதாக தேர்வாகி உள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.இது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ள நிலையில் இருவருக்கும் இடையே ஏன் இந்த மோதல் நிலவுகிறது? டொனால்ட் டிரம்ப் ஏன் ஜஸ்டின் ட்ரூடோவை ஒழித்து கட்ட நினைக்கிறார்? என்பது பற்றிய விபரம் வருமாறு:
அமெரிக்காவும், கனடாவும் அண்டை நாடுகளாக உள்ளன.இருநாடுகளும் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. கனடாவுக்கு, அமெரிக்கா தொடர்ந்து பல உதவிகளை செய்து வருகிறது. இதற்கிடையே தான் தற்போது இருநாடுகள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
கனடா பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோவுக்கும், அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற டொனால்ட் டிரம்ப்புக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. மோதல் என்றால் சாதாரணமானது இல்லை. கனடா என்ற தனிநாடே இருக்க கூடாது. கனடாவை அமெரிக்காவின் ஒரு அங்கமாக மாற்றம் வேண்டும் என்ற அளவுக்கு டொனால்ட் டிரம்ப் பேசி வருகிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்து இன்னும் 2 மாதங்கள் கூட ஆகவில்லை. இருப்பினும் கனடாவை அமெரிக்காவின் ஒரு அங்கமாகவும், அமெரிக்காவின் 51வது மாகாணமாகவும் மாற்ற வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப் கூறிவிட்டார். கனடாவில் வசிக்கும் மக்களும் அந்த நாட்டை அமெரிக்காவின் அங்கமாக மாற்ற ஆதரவு தெரிவித்துள்ளதாக டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி கனடா பொருளுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். ஏற்கனவே . பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் கனடாவுக்கு இது பேரிடியாக உள்ளது.
இதனால் டொனால்ட் டிரம்பின் இந்த பேச்சு என்பது ஜஸ்டின் ட்ரூடோவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் செல்வாக்கு என்பது சொந்த கட்சியினர், அந்த நாட்டு மக்களிடம் இருந்து தொடர்ந்து சரிந்து வருகிறதுஅடுத்த ஆண்டு கனடாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஜஸ்டின் ட்ரூடோ அதற்கு முன்பாகவே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில் தான் டொனால்ட் டிரம்ப், ஜஸ்டின் ட்ரூடோவை குறிவைத்து தாக்குவதன் பின்னணியில் உள்ள 4 முக்கிய காரணங்கள் வெளியாகி உள்ளன.
முதல் காரணம்
அதாவது டொனால்ட் டிரம்ப் முதல் முறையாக 2017 ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 20ம் தேதி வரை அமெரிக்க அதிபராக செயல்பட்டார். அந்த சமயத்தில் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற உடன் அவரை சந்தித்தார் ஜஸ்டின் ட்ரூடோ. அப்போதே இருவருக்கும் இடையே தயக்கம் இருந்தது. இருவரும் நீண்டநேரம் கைக்கொடுக்காமல் இருந்தனர். அதன்பிறகு தான் டொனால்ட் டிரம்ப், ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கைக்கொடுத்தார். அதன்பிறகு அடுத்த சில மாதங்களில் ஜி7 உச்சி மாநாடு நடந்தது.அந்த மாநாட்டில் டிரம்ப் பருவநிலை மாற்றம், பாரிஸ் ஒப்பந்தத்தை ஆதரிக்காத நிலையில் ஜஸ்டின் ட்ரூடோ எதிர் நிலைப்பாட்டை எடுத்தார். இதனால் டொனால்ட் டிரம்ப், ஜஸ்டின் ட்ரூடோ மீது கடும் கோபமடைந்தார். இது முதல் காரணம்.
2வது காரணம்
கடந்த 2018 ம் ஆண்டு ஜுன் மாதம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கனடா ஸ்டீல் மற்றும் அலுமினிய பொருட்கள் மீது அதிக வரியை டிரம்ப் விதித்தார். இதனை ஜஸ்டின் ட்ரூடோ எதிர்த்தார். கனடாவை டிரம்ப் அவமதிப்பு செய்வதாக சாடினார். அதுமட்டுமின்றி டொனால்ட் டிரம்ப்புக்கு பதிலடி கொடுக்க அமெரிக்க பொருட்களின் மீதான வரியை உயர்த்தி அறிவித்தார் ஜஸ்டின் ட்ரூடோ. அதுமட்டுமின்றி அந்த ஆண்டு நடந்த ஜி7 உச்சி மாநாட்டில் டொனால்ட் டிரம்பின் வரி அதிகரிப்பு நடைமுறையை ஜஸ்டின் ட்ரூடோ பகிரங்கமாக விமர்சித்தார். இதற்கு டிரம்ப் தனது வலைதளத்தில் ஜஸ்டின் ட்ரூடோ நேர்மையற்றவர் என்று விளாசியிருந்தார்.
3வது காரணம்
டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜஸ்டின் ட்ரூடோ இடையே வர்த்தகம் சார்ந்து மட்டுமின்றி கருத்தியல் வேறுபாடும் உள்ளது. 2017 ல் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் நாடுகளை குறிவைத்து பயண தடையை விதித்தார். இதனை ஜஸ்டின் ட்ரூடோ விமர்சனம் செய்தார்.அதேபோல் கனடாவில் இருந்து அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக பலரும் நுழைகின்றனர். போதைப்பொருள் பரிமாற்றமும் நடப்பதாக கூறப்படுகிறது. இதனால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதுடன், அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பும் பறிபோகிறது என்று டொனால்ட் டிரம்ப் கூறிவருவது 3வது காரணமாகும்.
4வது காரணம்
இந்த 3 காரணங்களால் தான் தற்போது டொனால்ட் டிரம்ப், கனடாவுக்கு 25 சதவீத கூடுதல் வரியை விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். சமீபத்தி்ல அமெரிக்காவின் மார் ஏ லாகோ ரெசார்ட்டில் டொனால்ட் டிரம்பை சந்தித்த ஜஸ்டின் ட்ரூடோ, வரி குறைப்பு பற்றி கூறினார். ஆனால் டொனல்ட் டிரம்ப் பாசிட்டிவான பதிலை கூறவில்லை. இது 4வது காரணமாகும்.
கனடா முடங்க வாய்ப்பு
உண்மையில் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக 2025 ஜனவரி 20ம் தேதி பொறுப்பேற்க உள்ளார்.அதன்பிறகு நேரடியாக கனடாவுக்கு எதிரான செயல்களை அவர் நிச்சயம் செய்வார். அதற்குள் ஜஸ்டின் ட்ரூடோ, டொனால்ட் டிரம்பை சமாதானம் செய்து சரிகட்ட வேண்டும். இல்லாவிட்டால் கனடா பொருளாதார ரீதியாகவும் கடும் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அதுமட்டுமின்றி கனடா பல்வேறு துறைகளில் முடக்கத்தை சந்திக்கலாம். ஆனால் தற்போதைய சூழலில் இருதலைவர்களும் சமாதானம் ஆகும் நிலையில் என்பது குறிப்பிடத்தக்கது.