தங்க நகை அடகு வைத்தவரின் புத்திசாலித்தனம்.. 1764 ரூபாய்க்கு 50 ஆயிரம் தரப்போகும் தேனி நிதி நிறுவனம்

post-img
தேனி: தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி அலுவலகத்தில் டிரைவராக வேலை பார்த்து வரும் பாண்டியன் என்பவர் கடந்த ஜனவரி மாதம் தேனியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் இரண்டு பவுன் தங்க நகை அடகு வைத்தார். அவருக்கு தர வேண்டிய ரூ.63 ஆயிரத்து 900 கடன் தொகைக்கு பதில் ரூ.62 ஆயிரத்து 136 வரவு வைக்கப்பட்டுள்ளது. ரூ.1,764 தராத அந்த நிதி நிறுவனத்திடம் டிரைவர் பாண்டியன் இப்போது 50000 பெற போகிறார்.. எப்படி என்பதை பார்ப்போம். பொதுவாக பல்வேறு சேவை குறைபாடுகளுக்கு நுகர்வோர் நீதிமன்றங்களில் மக்களால் எளிதாக நிவாரணம் பெற முடியும். நுகர்வோர் நீதிமன்றங்களில் புகாரைமனுவாக அளித்து நிவாரணம் பெற முடியும். ஆனால் மக்களுக்கு நுகர்வோர் நீதிமன்றம் குறித்து விழிப்புணர்வு குறைவாக உள்ளது. நுகர்வோர் நீதிமன்றங்களில் எதற்கு அலைய வேண்டும் என்ற எண்ணம் காரணமாக பலரும் விட்டுவிடுகிறார்கள். ஒரு சிலர் மட்டுமே சேவை குறைபாட்டிற்காக நீதிமன்றங்களை நாடி நிவாரணம் பெறுகிறார்கள். நுகர்வோர் நீதிமன்றங்களில் உங்கள் குறைகளை குறிப்பிட்டு மனுவாக எழுதி அளித்து நடந்தததை விவரித்தாலே போதும்.. இதற்கு பெரிய அளவில் எதுவும் தேவையில்லை.. புகாரை பதிவு செய்து குறிப்பிட்ட நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி பதில் அளிக்க சொல்வார்கள். நீதிமன்றத்தின் விசாரணைக்கு பிறகு இழப்பீடு பெற முடியும்.நுகர்வோர் நீதிமன்றங்களில் கோடி ரூபாய் கூட இழப்பீடு பெற முடியும்.. தேனியில் தங்க நகை அடகு வைத்தவர் அப்படித்தான் இப்போது 50000 இழப்பீடு பெற போகிறார். போடியை சேர்ந்த 58 வயதாகும் பாண்டியன் என்பவர் போடி நகராட்சி அலுவலகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த ஜனவரி மாதம் தேனியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்திற்கு தங்க நகையை அடகு வைப்பதற்காக சென்றுள்ளார். அங்கு தனது 2 பவுன் தங்க நகையை அடகு வைத்து கடன் பெற்றார். டிரைவர் பாண்டியனுக்கு ரூ.63 ஆயிரத்து 900 கடன் வழங்கப்பட்டதாக எஸ்எம்எஸ் வந்தது. ஆனால், அவருடைய வங்கிக்கணக்கில் ரூ.62 ஆயிரத்து 136 மட்டுமே வரவு வைக்கப்பட்டதாக கூறப்படுகறிது. அவர்கள் கூறிய தொகையில் இருந்து, கடன் தொகையில் ரூ.1,764 குறைவாக இருந்தது. இதுகுறித்து டிரைவர் பாண்டியன் குறிப்பிட்ட தேனி தனியார் நிதி நிறுவனத்தின் கிளைக்கு சென்று கேட்டார். நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் அவருக்கு முறையான பதில் அளிக்காமல் ஒருமையில் பேசி மன உளைச்சலை ஏற்படுத்தினார்களாம். இதுகுறித்து தனியார் நிதி நிறுவனத்தின் தேனி கிளை அலுவலகம், மண்டல அலுவலகம், மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு அவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். அதற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து தேனியில் வழக்கறிஞர் மூலமாக தேனி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு சென்னை நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி சுந்தர், உறுப்பினர் சவுந்தரராஜன் ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிவில், சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் பாண்டியனுக்கான கடன் பாக்கி ரூ.1,764-ஐ ஒரு மாதத்துக்குள் கொடுக்க வேண்டும். சேவை குறைபாட்டுக்கு ரூ.20 ஆயிரம், மன உளைச்சலுக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும். வழக்குச் செலவுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Post