சைடு கேப்பில் விஜய் கேட்ட கேள்வி! எம்ஜிஆரின் "திண்டுக்கல்" அஸ்திரத்தை கையில் எடுக்கும் தவெக! போச்சு

post-img
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆலோசனை செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. காங்கிரசின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்.எல்.ஏ. மறைவையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு விரைவில் தேர்தல் நடக்கவிருக்கிறது. இடைத்தேர்தல் நடத்த 6 மாத காலம் அவகாசம் இருந்தாலும், விரைந்து நடத்த தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்க திமுக அரசு ஆலோசிப்பதாகத் தெரிகிறது. ஒரு சட்டசபை தொகுதி காலியாகிறது என்றால் 6 மாதத்தில் அங்கே தேர்தல் நடக்க வேண்டும். அதுவே சட்டசபை பொதுத்தேர்தல் நடக்க 1 வருடம் மட்டுமே இருக்கிறது என்றால் அங்கே இடைத்தேர்தல் தேவை இல்லை. அந்த வகையில் ஈரோடு கிழக்கில் நேற்று சட்டசபை காலியானது. கணக்குப்படி பொதுத்தேர்தல் நடக்க இன்னும் 1 வருடம் 6 மாதங்கள் உள்ளன. இதனால் 151 ஏ சட்டப்படி அங்கே இடைத்தேர்தல் நடக்க வேண்டும். அதேசமயம், இடைத்தேர்தலில் போட்டியிடலாமா? வேண்டாமா? என்கிற விவாதங்கள், எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜகவிடம் நடந்து கொண்டிருக்கின்றன. எந்த தேர்தலாக இருந்தாலும் தனித்துப் போட்டியிட்டு வருகிற சீமானின் நாம் தமிழர் கட்சி, இந்த இடைத்தேர்தலை புறக்கணிக்கலாமா? என்கிற யோசனையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. காரணம், தமிழகம் முழுக்க பெரும்பாலான மாவட்டங்களில் சீமான் கட்சியை விட்டு மாவட்ட அமைப்புகள் காலியாகி கொண்டிருக்கும் நிலையில், தேர்தல் பணிகளை எப்படி முன்னெடுப்பது என்கிற குழப்பம் தான், இந்த முறை தேர்தலை புறக்கணிக்கலாம் என்கிற யோசனை. எம்ஜிஆர் அஸ்திரம்: இதற்கிடையே, புதிதாக கட்சி ஆரம்பித்து மாநில மாநாட்டையும் நடத்தி முடித்த த.வெ.க.விஜய், இடைத்தேர்தல் போட்டி குறித்து ஆராய்ந்துள்ளார். ஈரோடு மற்றும் மாவட்ட த.வெ.க. வினர், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இடைத்தேர்தலை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வெற்றியோ தோல்வியோ இறங்கிப் பார்த்திடலாம் என்று கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு தகவல் அனுப்பி வருகின்றனர். தவெகவின் அறிவுஜீவிகள் என சொல்லப்படும் இண்டலக்சுவல்கள், அதிமுகவை எம்ஜிஆர் ஆரம்பித்தபோது சட்டமன்ற பொதுத் தேர்தலை எதிர் கொள்ளும் மனநிலையில் தான் தொடங்கினார். ஆனால், எதிர்பாராத விதமாக திண்டுக்கல்லுக்கு இடைத்தேர்தல் வந்தது. அதில் துணிச்சலாக அதிமுகவை களமிறக்கி வெற்றிக்கண்டார். அந்த வெற்றி அடுத்த பொதுத் தேர்தலுக்கான வெற்றியாக அமைந்தது. அதேபோல, நமக்கும் ஒரு வாய்ப்பு அதே பாணியில் கிடைத்திருக்கிறது. அதனால், இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என்று வலியுறுத்துகின்றனர். ஆனால், விஜய்யோ, எம்ஜிஆர் காலத்து அரசியல் சூழல்களா இப்போது இருக்கிறது? அன்றைக்கெல்லாம் நியாயமாக தேர்தல் நடந்தது. இப்போது அந்த நேர்மையை களத்தில் உறுதிப்படுத்த முடியுமா? தேர்தல் ஆணையமே அந்த உறுதியைக் கொடுக்க முன் வருவதில்லை. நியாயமான தேர்தல் என்பது சாத்தியமில்லை. அதனால், நம்முடைய இலக்கு பொதுத்தேர்தல் என்பதுதான். அதனை நோக்கியே நம் பயணம் இருக்கட்டும் என்று கூறியுள்ளார். அதாவது, இடைத்தேர்தலில் ஒருவேளை தோற்றுப் போனால் அந்த தோல்வியைத்தான் திமுக சொல்லி சொல்லி அடிக்கும். அதற்கு இடம் தரவேண்டாம் என விஜய் நினைக்கிறார். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி குறித்த கள நிலவரம் எப்படி இருக்கும் என்பதை ஒரு சர்வே எடுத்துப் பார்க்கலாம் என்கிற யோசனை தேர்தல் வியூக வகுப்பாளர் தரப்பில் விஜய்க்கு சொல்லப்பட்டுள்ளது.

Related Post