சென்னை: எங்க ஸ்டாலின் அப்பா.. என் தந்தை நிலையில் இன்று என்னை படிக்க வைத்தவர் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை அருள்மிகு கபாலீசுவரர் கோவில் கலை, அறிவியல் கல்லூரி மாணவிகள் நன்றி தெரிவித்தனர். மாணவிகளின் இந்த பேச்சுகளால் தாம் நெக்குருகிப் போனேன் என சமூக வலைதளப் பக்கங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: உள்ளத்தில் எழுந்த உணர்வுகளுக்கு உருக்கொடுத்து "அப்பா" என்று உறவாடிய, "அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி" மாணவர்களின் அன்பில் நெக்குருகிப் போனேன்.
கொளத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் உள்ள மாணவர்களுக்காகத் தொடங்கப்பட்டு, வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்த, இந்தக் கல்லூரிக்கான கட்டடக் கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தேன்.
கல்விப் பணியிலும் ஈடுபட்டு ஏழை - எளிய மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் அறநிலையத்துறையின் பணி வாழி! இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
உள்ளத்தில் எழுந்த உணர்வுகளுக்கு உருக்கொடுத்து “அப்பா” என்று உறவாடிய, “அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி” மாணவர்களின் அன்பில் நெக்குருகிப் போனேன்.
கொளத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் உள்ள மாணவர்களுக்காகத் தொடங்கப்பட்டு, வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்த,… pic.twitter.com/ygUXO5DIhg
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் திருக்கோயில்களின் சார்பில் 25 பள்ளிகளும், 10 கல்லூரிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் மொத்தம் 22,249 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். அண்மையில் கொளத்தூர், திருச்செங்கோடு, விளாத்திக்குளம், ஒட்டன்சத்திரம் ஆகிய இடங்களில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இதில் கொளத்தூர், முதல்வர் மு.க.ஸ்டாலினின் தொகுதி. கொளத்தூர் கபாலீசுவரர் கல்லூரியில் உதவிப் பேராசிரியர்கள், நூலகர், உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
கொளத்தூர் கல்லூரிக்கு ரூ25 கோடியில் புதிய கட்டிடங்களை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின். இக்கல்லூரியின் தரை மற்றும் நான்கு தளங்களுடன் 20 வகுப்பறைகள், முதல்வர் அறை, ஆசிரியர்கள் அறை, அலுவலகம், ஆய்வகங்கள், கணினி அறை, கருத்தரங்கு கூடங்கள், நூலகம், உணவகம், கழிவறைகள் மற்றும் வாகன நிறுத்துமிடம் போன்ற வசதிகள் இடம் பெற உள்ளன.