வேலூர்: வேலூரை கடந்த 2 நாட்களாகவே உலுக்கி எடுத்து வருகிறது இளம்தாய் மற்றும் 3 வயது குழந்தையின் மரணம்.. இது தற்கொலையா? கொலையா? என்று இதுவரை தெரியவில்லை.. ஆனால், சத்துவாச்சாரி போலீசார் தீவிரமான விசாரணையை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
வேலூர் அலமேலுமங்காபுரம் பகுதியை சேர்ந்த தம்பதி நந்தகுமார் - நித்யஸ்ரீ.. இவர்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. நித்யஸ்ரீக்கு இப்போது 25 வயதாகிறது. இந்த தம்பதிக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறான். ஆனால், தம்பதி இடையே அடிக்கடி பிரச்சினையும், தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது.
திடீர் மரணம்: இப்படிப்பட்ட சூழலில், நித்யஸ்ரீயும், யோகேஸ்வரனும் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த நித்யஸ்ரீயின் உறவினர்கள் உடல்களை பார்த்து கதறி கதறி அழுதுள்ளனர்.. அப்போது நந்தக்குமாரும் கண்ணீர் வடித்து கொண்டிருந்தார். இதைப்பார்த்த நித்யஸ்ரீயின் உறவினர்கள், நந்தக்குமாரை திடீரென ஆத்திரத்தில் சரமாரியாக தாக்க துவங்கியிருக்கிறார்கள். இதில், நந்தகுமார் படுகாயமடைந்தார்.
அங்கிருந்தவர்கள் படுகாயங்களுடன் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.. தற்போது நந்தக்குமாருக்கு தீவிர சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது.. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்து, 2 சடலங்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணையையும் துவங்கினார்கள்..
குழந்தைகள்: இதுகுறித்து போலீசார் சொல்லும்போது, "நந்தகுமாரும் நித்யஸ்ரீயும் காதலித்து திருமணம் கொண்டவர்கள். இவர்களுக்கு மொத்தம் 3 குழந்தைகள்.. ஆனால், ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உடல்நலம் குன்றி இறந்துவிட்டார்கள்.. 3வதாக பிறந்த யோகேஸ்வரனும் உடல்நல பாதிப்பு இருந்து வந்திருக்கிறது.
நித்யஸ்ரீயின் உடலை ஆய்வு செய்ததில், அவரது கழுத்தில் தூக்குப் போட்டதற்கான அடையாளங்கள் காணப்படுகிறது.. ஆனால், குழந்தை இறப்புக்கான காரணம் இதுவரை கண்டறிய முடியவில்லை. 2 பேருமே கொலை செய்யப்பட்டுள்ளனரா? அல்லது குடும்பப் பிரச்சனை காரணமாக குழந்தையை கொன்றுவிட்டு நித்யஸ்ரீ தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.
காதல் திருமணம்: இந்த இரட்டை மரண சம்பவம் வேலூரை உலுக்கி எடுத்து வருகிறது.. நித்யஸ்ரீ, நந்தகுமார் இருவருமே அலமேலுமங்காபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாக படித்தவர்களாம்.. படிக்கும்போது காதலித்து வந்துள்ளனர். பிறகுதான், கடந்த 2018-ல் பெற்றோருக்குத் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துள்ளனர். இந்த திருமணத்தை கேள்விப்பட்ட நித்யஸ்ரீயின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தாலும், மகளின் விருப்பத்துக்காக இந்த காதல் திருமணத்தை ஏற்றுக் கொண்டார்களாம்.
முதல் குழந்தை இறந்து, 2வதாக பிறந்திருக்கிறான் யோகேஸ்வரன்.. இந்த யோகேஸ்வரனுக்கு பிறகு இன்னொரு குழந்தை பிறந்ததாம்.. அந்த குழந்தையும் 4 மாதங்களுக்கு முன்புதான் இறந்துள்ளது.. அந்த துயரத்திலிருந்து மீள்வதற்குள் யோகேஸ்வரனுக்கும் உடல்நல பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.. இதற்காக சிகிச்சையையும் நித்யஸ்ரீ, நந்தகுமார் தந்து வந்திருக்கிறார்கள்.
நித்யஸ்ரீ பரிதாபம்: இப்படிப்பட்ட சூழலில்தான் வெறுப்படைந்த நந்தகுமார், வேலைக்கும் போகாமல், நித்யஸ்ரீயை தாக்கி வரதட்சணை கொடுமைச் செய்துவந்ததாகவும் கூறப்படுகிறது.
மாமியாரும், நாத்தனாரும்கூட நித்யஸ்ரீயை வீட்டை விட்டு துரத்துவதிலேயே குறியாக இருந்தார்களாம். ஆனால், திடீரென மகளும், பேரனும் மர்மமான முறையில் பஞ்சு மெத்தையில் இறந்து கிடந்ததாக கொதித்து சொல்கிறார்கள் நித்யஸ்ரீயின் உறவினர்கள். எனவே, தங்கள் மகள், பேரனை கொன்றதுக்கு காரணமே நந்தகுமார் என்றும் ஆவேசத்துடன் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
காரணம், நித்யஸ்ரீயின் கழுத்தில் நெரிக்கப்பட்டதற்கான வீக்கங்கள் இருக்கிறதாம். அதனால், நித்யஸ்ரீயை கழுத்தை நெரித்து கொன்ற, குழந்தையை தலையணையால் முகத்தை அமுக்கி கொன்றிருக்கலாம் என்று சந்தேகத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
நாத்தனார் எங்கே: ஆனால், தூக்கில் தொங்கியதற்கான எந்த தடயமும் சடலங்கள் கிடந்த அறையில் காணப்படவில்லையாம்.. அறையில் தூக்குக் கயிறும் இல்லையாம்.. எனினும்., இது தற்கொலையா? கொலையா? என்ற விசாரணையை போலீசார் நடத்தி வருகிறார்கள்.. நந்தகுமாரை ஆத்திரத்தில் நித்யஸ்ரீ குடுமபத்தினர் அடிக்கும்போது, நித்யஸ்ரீயின் மாமியாரும், நாத்தனாரும் அங்கிருந்து தலைமறைவாகி விட்டார்களாம். அவர்களை தேடும் பணியும் நடந்து வருகிறது.