சென்னை: அண்ணா திமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 37-வது நினைவு நாள் இன்று. எம்ஜிஆர் நினைவு நாளை முன்னிட்டு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தமது சமூக வலைதளப் பக்கத்தில், மக்கள் மனம் கவர்வதில் எனக்கு மானசீகப் பாடம் நடத்தி ஆசிரியர் ஆனவர் என்று புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
திமுகவின் பிரசார பீரங்கியாக இருந்தவர் எம்ஜிஆர்; அண்ணா மறைவுக்கு திமுகவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) என தனிக் கட்சி கண்டனர். 1977-ம் ஆண்டு முதல் தாம் மறைந்த 1987-ம் ஆண்டுவரை தமிழ்நாடு முதல்வராக பதவி வகித்தார் எம்ஜிஆர்.
எம்ஜிஆரின் 37-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அதிமுகவினர் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினர். எம்ஜிஆர் நினைவு நாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்ட சில கருத்துகள்:
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்: குழந்தையாகத் தவழ்ந்த நேரத்தில் மடி ஒன்றைக் கொடுத்தவர்; நான் சிறுவனாக சினிமா புகுந்த காலத்தில் நட்சத்திரமாக முன்னோடியவர்; மக்கள் மனம் கவர்வதில் எனக்கு மானசீகப் பாடம் நடத்தி ஆசிரியர் ஆனவர்... அன்புக்கும் மரியாதைக்குமுரிய உறவாக நிலைத்துவிட்ட எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவு நாள் இன்று. எந்நாளும் மறையாத நினைவுகளைத் தந்தவரை இந்நாளில் வணங்குகிறேன்.
அதிமுக அதிகாரப்பூர்வ எக்ஸ் தளம்: ஆயிரத்தில் ஒருவர், ஏழைகளின் ஏந்தல், கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர், மறைந்தாலும் மக்கள் மனதில் நீங்கா நினைவாய் இன்றும் காலத்தை வென்று வாழும் நம் இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு புகழஞ்சலி!
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்: அஇஅதிமுக என்ற மாபெரும் மக்கள் இயக்கத்தின் நிறுவனத்தலைவர், சத்துணவு தந்த சரித்திர நாயகன், மக்கள் திலகம், இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 37வது ஆண்டு நினைவு நாளில், அவர்களின் தியாகங்களையும், பெரும் புகழையும் நினைவு கூர்ந்து போற்றி வணங்குகிறேன்.