சென்னை: நாம் எவ்வளவு கஷ்டப்பட்டு பணத்தைச் சேர்த்து வைத்தாலும் அதைச் சரியான முறையில் முதலீடு செய்ய வேண்டியது முக்கியம். இல்லையென்றால் பணவீக்கம் காரணமாக நமது பணத்தின் மதிப்பு தொடர்ந்து குறையும். ஒரு வேலை நீங்கள் இந்தாண்டு தொடக்கத்தில் பங்குச்சந்தை, கடன் பத்திரம், தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட்டில் ஒரு லட்சம் முதலீடு செய்திருந்தால் இப்போது அது என்னவாக இருக்கும் என்பதை நாம் பார்க்கலாம்.
இந்த காலத்தில் விலைவாசி தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அதாவது ஓராண்டிற்கு முன்பு உங்கள் வீட்டின் மளிகை பொருட்களுக்கு ரூ.4000 போதுமானதாக இருந்து இருக்கும். ஆனால் இந்தாண்டு அது பத்தாமல் போகும். இதற்குக் காரணம் விலைவாசிதான்.
விலைவாசி தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், நாம் சரியான துறையில் முதலீடு செய்ய வேண்டும். அப்போது தான் பணவீக்கத்தைத் தாண்டி நமது செல்வம் அதிகரிக்கும். முதலீடு செய்யாமல் வெறுமன வங்கியில் பணத்தைச் சேமித்து மட்டும் வைத்தால் அது நமக்குப் பெரியளவில் லாபத்தைத் தராது.. முதலீடு செய்யலாம் எல்லாம் ஓகே.. ஆனால், எதில் முதலீடு செய்வது என்ற கேள்வி உங்களுக்கு வரும். அதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.
4 முதலீடுகள்: பொதுவாக 4 வகையான முதலீடுகள் உள்ளன. அதில் இந்தியாவில் ரொம்பவே பிரபலமானது என்றால் அது ரியல் எஸ்டேட் தான். நிலத்தில் பணத்தைப் போட்டால் பத்திரமாக இருக்கும் எனப் பலரும் நாம் சொல்லிக் கேட்டு இருப்போம். இதனால் பலரும் கடன் வாங்கி வீடு, நிலம் வாங்குவதைப் பார்த்து இருப்போம். அடுத்து தங்கம்.. நாட்டில் அனைவருமே முதலில் சேமிப்பது தங்கத்தைத் தான். சேமிப்பு என்பதைத் தாண்டி கலாச்சார ரீதியாகவும் தங்கத்திற்கும் நமக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இதனால் பலரும் தங்கத்தில் ஆர்வமாக முதலீடு செய்வார்கள்.
இந்த இரண்டிற்குப் பிறகு பங்குச்சந்தையிலும் ஓரளவுக்கு மக்கள் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இருப்பினும், பலருக்கும் பங்குச்சந்தை என்றால் என்ன.. அவை எப்படி இயங்கும் என்பது புரியாத புதிராகவே இருப்பதால் இன்னும் மக்கள் பலர் இந்தப் பக்கம் வராமல் இருக்கிறார்கள். இது தவிரக் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் ஆப்ஷனும் நமக்கு இருக்கிறது. இப்படி 4 வகையான முதலீடுகள் பிரதானமாக உள்ளன.
எதில் லாபம் அதிகம்: சரி, விஷயத்திற்கு வருவோம் இந்தாண்டு தொடக்கத்தில் நீங்கள் ஒரு லட்ச ரூபாயை முதலீடு செய்து இருந்தால்.. இதில் எது நமக்கு அதிக லாபம் கொடுத்து இருக்கும்.. எது குறைவான லாபத்தைக் கொடுத்து இருக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம். இதில் நமக்குக் கிடைத்துள்ள சில முடிவுகள் அதிர்ச்சி தருவதாகவே இருக்கிறது.
அதாவது இதில் அதிக லாபம் கொடுத்துள்ளது என்னவோ பங்குச்சந்தை தான். நீங்கள் இந்தாண்டு தொடக்கத்தில் நிஃப்டி 500ல் ஒரு லட்ச ரூபாயை முதலீடு செய்து இருந்தால் இப்போது அது ரூ.1,21,300ஆக இருந்து இருக்கும். பங்குச்சந்தை அதிக லாபம் கொடுக்கிறது என்றாலும் உங்களின் அனைத்து சேமிப்பையும் இதில் ஒரேயடியாக முதலீடு செய்யக்கூடாது என்பதே வல்லுநர்களின் கருத்தாகும்.
தங்கம்: பங்குச்சந்தைக்குப் பிறகு அதிக லாபம் கொடுத்துள்ளது தங்கம் தான். இந்தாண்டு தொடக்கத்தில் நீங்கள் தங்கத்தில் ஒரு லட்ச ரூபாயை முதலீடு செய்து இருந்தால், அது இப்போது ரூ. 1,20,700 ஆக இருக்கும். அதாவது தங்கத்திற்கும் பங்குச்சந்தைக்கும் பெரியளவில் வேறுபாடு இல்லை என்றே அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்த இடத்தில் கடன் பத்திரங்கள் வருகிறது. கடன் பத்திரங்கள் நீங்கள் ஆண்டின் தொடக்கத்தில் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்திருந்தால் அது வெறும் ரூ.1.08 லட்சமாக மட்டுமே அதிகரித்து இருக்கும். இதில் அதிர்ச்சி என்னவென்றால் இருப்பதிலேயே குறைந்த லாபம் என்றால் அது ரியல் எஸ்டேட் தான்.
ரியல் எஸ்டேட் மோசம்: நீங்கள் இந்தாண்டு தொடக்கத்தில் ஒரு லட்சம் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்திருந்தால்.. அது வெறும் ரூ. 1.02 லட்சமாகவே அதிகரித்து இருக்கும்.. நீங்க ஏதோ ஊர்ப் பெயர் தெரியாத இடத்தில் உள்ள ரியல் எஸ்டேட் மார்க்கெட்டை கணக்கிடுகிறீர்கள் எனச் சொல்லலாம். ஆனால், உண்மையில் இது அகில இந்திய வீட்டு விலைக் குறியீடு வெளியிட்ட பெங்களூர், சென்னை டெல்லி உள்ளிட்ட நகரின் டாப் 10 நகரங்களின் சராசரி ரியல் எஸ்டேட் மதிப்பாகும்.
அதாவது இந்தாண்டு அதிக லாபம் கொடுத்ததது எனப் பார்த்தால் அது பங்குச்சந்தையும் தங்கமும் தான். இரண்டிற்கும் இடையே சில நூறு ரூபாய் மட்டுமே வேறுபாடு இருக்கிறது. தொடர்ந்து கடன் பத்திரம் மூன்றாவது இடத்திலும் ரியல் எஸ்டேட் மிக குறைந்த லாபத்துடன் நான்காவது இடத்திலும் இருக்கிறது.