கலை நிகழ்ச்சிகள், ஆன்மீக பயணம் - கலைகட்டும் சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி..!

post-img

குஜராத் – தமிழ்நாடு இடையேயான வரலாற்று சிறப்புமிக்க உறவை எடுத்துரைக்கும் வகையில் சௌராஷ்ட்ரா – தமிழ் சங்கமம் நிகழ்ச்சி ஏப்ரல் 17ஆம் தேதி குஜராத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. குஜராத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையேயான கலாச்சார முக்கியத்துவத்தையும், பிணைப்பையும், ஒற்றுமையையும் பறை சாற்றும் விதமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த சங்கம நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார். இதில் குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவின் மூன்றாவது நாளான இன்று பல்வேறு கலை நிகழ்ச்சிகள், கலாச்சார, ஆன்மீக பயணங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து சென்றுள்ள சுற்றுலா பயணிகள் துபானி பகுதியில் உள்ள ஜோதிர்லிங்க தலமான நாகேஸ்வர ஜோதிர்லிங்கத்தை தரிசிக்க உள்ளனர்.

 

அத்துடன் தமிழ்நாடு மற்றும் குஜராத்தின் பிரத்யேக கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களின் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய ஜவுளித் துறை அமைச்சகத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சி சோம்நாத் மற்றும் துவாரகாவில் நடைபெறுகிறது.

 

ஜவுளித் துறையுடன் சம்பந்தப்பட்ட முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக ஏப்ரல் 21 மற்றும் 22-ஆம் தேதிகளில் ராஜ்கோட்டில் ஜவுளித் தொழில்துறையின் பங்குதாரர்களுடன் சிந்தனை முகாம் ஒன்றையும் அமைச்சகம் நடத்துகிறது. அத்துடன் இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக விளையாட்டுப் போட்டிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

 

சிறப்பு ரயில் மூலம் மதுரையில் இருந்து வருபவர்கள் இந்தப் போட்டிகளில் ஏப்ரல் 26 ஆம் தேதி வரை கலந்து கொள்ளலாம். பயிற்சி பெற்ற தமிழ்நாடு மற்றும் குஜராத் விளையாட்டு வீரர்களுக்கு பாவ்நகரில் ஏப்ரல் 22, 23 ஆகிய தேதிகளில் வாலிபால், டேபிள் டென்னிஸ், புல்தரை டென்னிஸ், கபடி போன்ற விளையாட்டுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Post