இந்தியாவா? பாரத்தா? பிரஸ் மீட்டில் தனது ஸ்டைலில் vadivel

post-img

மதுரை: இந்தியா என்ற பெயர் பாரத் என மாற்றப்படுவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நடிகர் வடிவேலு பதில் அளித்துள்ளார். மதுரை ஏர்ப்போர்ட்டில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில் இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.


இந்தியாவின் பெயரை "பாரத்" என மாற்றம் செய்யும் மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மத்திய பாஜக அரசு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக குடியரசுத் தலைவரின் சார்பில் ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள இரவு விருந்து அழைப்பிதழில் President of Bharath எனப் குறிப்பிடப்பட்டிருந்தது.


மேலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான்- இந்தியா மாநாடு மற்றும் 18வது கிழக்கு ஆசிய மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இந்தோனேசியா சென்றுள்ள நிலையில், பிரதமர் மோடியின் பயணம் தொடர்பான நிகழ்ச்சி நிரல் அறிவிப்பிலும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister of Bharat) என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பாஜக அரசு, 'இந்தியா' என்பதற்குப் பதிலாக அதிகாரப்பூர்வமாக பயன்படுத்த தொடங்கியிருக்கிறது. இது எதிர்க்கட்சிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில், நடிகர் வடிவேலு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். அப்போது மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். பி.வாசு இயக்கத்தில் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாக உள்ள 'சந்திரமுகி' இரண்டாம் பாகம் குறித்துப் பேசினார். சந்திரமுகி -2 படத்தில் முருகேசன் கதாபாத்திரத்தில் தான் நடித்திருப்பதாகவும், படம் சிறப்பாக வந்திருக்கிறது என்றும் தெரிவித்தார்.


இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றி பிரதமர், குடியரசுத் தலைவர் நிகழ்ச்சிகளின் அறிவிப்பு வந்திருக்கிறதே, அது பற்றி உங்கள் கருத்து என்ன என செய்தியாளர்கள் கேள்விக்கு "நான் அந்த அரசியலிலே போகவில்லை. அப்படி போகும்போது சொல்கிறேன்" என பட்டும் படாமல் பதில் அளித்தார்.


தொடர்ந்து, செய்தியாளர்கள் அதிகுறித்து கேள்வி எழுப்பினர். இந்தியாவை பாரத் என்று மாற்றினால் ஆதரவு கொடுப்பீர்களா என செய்தியாளர்கள் கேள்விக்கு, "அதேதான். அந்த அரசியல் கோணத்தில் நான் போகவில்லை.. திரும்பத் திரும்பத் கேட்டா.. திரும்பத் திரும்பப் பேசுற நீ.." என சிரித்தபடி கிண்டலாக பதில் அளித்தார்.


தொடர்ந்து, பான் இந்தியா கலாச்சாரம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த வடிவேலு, "பிசினஸ் வைத்து செய்கிறார்கள். ஒரே ஏரியாவில் சுற்றிக்கொண்டே இருந்தோம் என்றால் கொட்டாம்பட்டியைத் தாண்ட மாட்டேங்குது, சினிமா வர்த்தகம் பெரிதாக உள்ளது. பான் இந்தியா தான் இந்தியாவில் எல்லாப் பக்கமும் பிசினஸ் ஆகிறது. பிசினஸ் ஏரியா என்பதால் பான் இந்தியா திரைப்படங்கள் தேவைப்படுகிறது" என்று தெரிவித்தார்.

 


 இந்தியாவை 'பாரத்’ என மாற்ற ரூ.14,304 கோடி செலவாகும்.. அடேங்கப்பா! ஏழைகளுக்கு 1 மாதம் உணவு தரலாமாமே!

Related Post