இந்தூர்: சாலை விபத்தில் கணவரை இழந்த பெண் ஒருவர் ரொம்பவே வினதோமான ஒரு கோரிக்கையை வைத்து இருக்கிறார். அதாவது உயிரிழந்த தனது கணவரின் விந்தணுக்களைச் சேமித்து வைக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்து இருக்கிறார். அப்படி விந்தணுக்களைச் சேமித்தால் மட்டுமே பிரேத பரிசோதனை செய்ய அனுமதிப்பேன் என அவர் பிரச்சினை செய்தது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
பொதுவாகச் சாலை விபத்தில் மூளைச் சாவு அல்லது உயிரிழப்புகள் நடந்தால், அந்த நபரின் உடல் உறுப்பு பாகங்களை குடும்பத்தினர் தானமாக வழங்குவார்கள். ஆனால், இங்கே மத்தியப் பிரதேச மாநிலம் ரேவாவில் உள்ள பெண் ஒருவர் வினோதமான கோரிக்கையை முன்வைத்து இருக்கிறார்.
அதாவது அந்த பெண்ணின் கணவர் விபத்தில் உயிரிழந்த நிலையில், மறைந்த தனது கணவரின் விந்தணுவைப் பாதுகாக்கக் கோரி அவர் கோரியுள்ளார். இதைக் கேட்டு ஒரு நொடி ஆடிப்போன சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனை மருத்துவர்கள், என்ன செய்வதென்று புரியாமல் தவித்தனர். அங்கு என்ன நடந்தது என்பதை நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அதாவது அந்த பெண்ணுக்கும் ஜிதேந்திர சிங் கெஹர்வார் என்ற நபருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. இந்தச் சூழலில் தான் எதிர்பார்க்காத வகையில் நடந்த விபத்தில் ஜிதேந்திர சிங் கெஹர்வார் உயிரிழந்தார்.
இதையடுத்து ஜிதேந்திர சிங்கின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அப்போது அங்கு வந்த ஜேந்திர சிங்கின் மனைவி முதலில் பிரேதப் பரிசோதனைக்குச் சம்மதிக்கவில்லை. போலீசார் அவருடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அப்போது தான் அவர் அந்த வினோதமான கோரிக்கையை முன்வைத்து இருக்கிறார்.
அதாவது தனது மறைந்த கணவரின் விந்தணுவைப் பாதுகாக்க வேண்டும் என்று அந்த பெண் கோரிக்கை வைத்து இருக்கிறார். இதன் மூலம் அதைக் கொண்டே தன்னால் கருத்தரிக்க முடியும் என்றும், அதன் பிறகு கணவருடன் இருந்த நாட்களை நினைத்துக் கொண்டே குழந்தையுடன் வாழ்ந்துவிடுவேன் என்றும் அந்த பெண் கூறியிருக்கிறார்.
இருப்பினும், ஜிதேந்திர சிங் உயிரிழந்து 24 மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டதால், அந்த பெண் சொல்வது போல விந்தணுவைச் சேமிக்க முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக தடயவியல் துறைத் தலைவர் டாக்டர் ரஜ்னீஷ் குமார் பாண்டே கூறுகையில், "பொதுவாக இறந்த ஒருவரின விந்தணுவைப் பாதுகாக்க வேண்டும் என்றால், அது உயிரிழந்த 24 மணி நேரத்திற்குள் எடுத்துப் பாதுகாக்கப்பட வேண்டும்.
அதன் பிறகு அதைச் செய்யவே முடியாது. அது மட்டுமின்றி எங்கள் மருத்துவமனையில் விந்தணுவைச் சேமித்து வைக்கத் தேவையான வசதிகள் எல்லாம் இல்லை" என்று கூறியிருக்கிறார்.
மருத்துவர் கூறியதைக் கேட்டு, மனமுடைந்த அந்த பெண், மருத்துவமனையிலேயே கதறி அழுதுள்ளார். அவரை அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் போலீசார் சமாதானப்படுத்தினர். நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகே பிரேதப் பரிசோதனைக்கும் ஒப்புக்கொண்டார். அது முடிந்த பிறகு உடல் இறுதிச் சடங்குகளுக்காக குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனையின் டாக்டர் அதுல் சிங் கூறுகையில், "அந்த பெண்ணுக்கு 4 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. அதற்குள் கணவரை இழந்ததால் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தார். இதனால் அவரை குறை சொல்ல முடியாது. அவரது கோரிக்கை காலதாமதமாக இருந்தது. இல்லையென்றால் கூட நாங்கள் முயன்று இருப்போம் என்றார்.