சென்னை: விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுகள், அரசியல் அரங்கில் புயலைக் கிளப்பி இருப்பது ஒரு புறம் என்றால், அவர் மீது நடவடிக்கை எடுக்க விசிக தலைவர் திருமாவளவன் தயங்குவது மற்றொரு புறம் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. ஆதவ் அர்ஜுனா மீது திருமாவளவன் நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்? அவரை நீக்கினால் விசிகவில் என்ன நடக்கும்? என நமது ஒன் இந்தியாவுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் அலசியுள்ளார் மூத்த பத்திரிகையாளர் மணி.
விசிக துணைப் பொதுச்செயலாளரும், வாய்ஸ் ஆப் காமன்ஸ் நிறுவனத்தின் நிறுவனருமான ஆதவ் அர்ஜூனா ஏற்பாட்டில் நடந்த 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டார். இந்த விழாவில் விஜய் பேசியது ஒருபுறம் இருக்க, ஆதவ் அர்ஜுனா பேசியது பெரும் சர்ச்சைகளைக் கிளப்பி விட்டுள்ளது.
மன்னராட்சி - ஆதவ் அர்ஜுனாவின் சர்ச்சை பேச்சு: தமிழகத்தில் மன்னராட்சி நடைபெறுகிறது. பிறப்பால் அனைவரும் சமம் என்ற கருத்தியலை அம்பேத்கர் உருவாக்கியதை போல, பிறப்பால் இனி ஒருவர் முதலமைச்சராக கூடாது. இனி தமிழகத்தை ஆள வேண்டும் என்றால் ஒரு கருத்தியல் தலைவர்தான் ஆளவேண்டும். தமிழகத்தில் இனி மன்னராட்சிக்கு ஒருபோதும் இடம் இல்லை என்று பேசினார் ஆதவ் அர்ஜுனா.
விசிகவுக்குள் சலசலப்பு: ஆதவ் அர்ஜுனாவின் பேச்சை விசிக தலைவர்களே கண்டித்துள்ளனர். திருமாவளவனும், ஆதவ் அர்ஜூனாவின் பேச்சு 100 விழுக்காடு தவறானது என்று கூறியுள்ளார். அவர் மீதான நடவடிக்கை பற்றி உயர்நிலைக் குழுவில் ஆலோசனை மேற்கொண்டு முடிவு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார் திருமாவளவன்.
கட்சியை விட்டு நீக்காத திருமாவளவன்: திமுக கூட்டணியில் தொடர்வோம் என தொடர்ந்து திருமாவளவன் பேசி வரும் நிலையில், அவரை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கும் வகையில் திமுகவுக்கு எதிராக தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருகிறார் ஆதவ் அர்ஜுனா. இத்தனைக்குப் பிறகும் அவரை நீக்காமல் இருப்பது ஏன் என திருமாவளவனை நோக்கி கேள்விகள் எழுந்து வருகின்றன.
இந்தச் சூழலில், இந்த குழப்பங்கள் குறித்தும், ஆதவ் அர்ஜுனாவை நீக்குவதில் திருமாவளவனுக்கு உள்ள சிக்கல்கள் பற்றியும், அவரை நீக்கினால் விசிகவுக்கு என்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்தும், நமது ஒன் இந்தியா தமிழுக்கு மூத்த பத்திரிகையாளர் மணி பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதனை இனி பார்க்கலாம்.
பத்திரிகையாளர் மணி பேட்டி: "திமுகவுடன் கூட்டணி சேர்ந்த பிறகு தான் விசிகவுக்கு மக்கள் மத்தியில் நல்ல அங்கீகாரம் கிடைத்தது. 2019 லோக்சபா தேர்தலில் 2 எம்.பிக்களை பெற்றார்கள். 2021ல் 6 சீட்டுகளில் நின்று 4 எம்.எல்.ஏக்கள் வந்தார்கள். 2024ல் மீண்டும் 2 எம்.பிக்கள் வந்து நல்ல செல்வாக்கோடு விசிக இருக்கிறது. 2009ல் திமுக கூட்டணியில் இருந்தபோது தான் திருமாவளவன் எம்.பி ஆனார். திமுக கூட்டணியில் இருக்கும்போது மட்டும் தான் விசிக ஜெயிக்கிறது.
ஆதவ் அர்ஜுனா விசிகவில் சேர்ந்த பிறகுதான் இந்த கூட்டணி புகைச்சலே வருகிறது. தொடர்ச்சியாக தர்ம சங்கடப்படுத்தும் வகையில் பேசி வருகிறார். அது இந்த இடத்தில் வந்து நிற்கிறது. இனி திமுகவுடன் விசிக சுமுகமான உறவில் தொடர முடியாது. ஒன்று திமுக கூட்டணியில் இருக்கவேண்டும், அல்லது ஆதவ் அர்ஜுனாவை நீக்க வேண்டும். ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் வைத்துக்கொண்டே திமுக கூட்டணியில் விசிகவால் தொடர முடியாது.
கட்சியை விட்டு நீக்கினால் பாதிப்பு: திமுகவின் சுயமரியாதை சீண்டி இருக்கிறார் ஆதவ் அர்ஜுனா. இனி ஆதவ் அர்ஜுனாவை திருமாவளவன் ஏதோ நிர்பந்தத்தால் கட்சியை விட்டு நீக்க முடியவில்லை, அதேபோல, விசிகவையும் கூட்டணியில் இருந்து ஸ்டாலினால் விலக்க முடியவில்லை என ஒரு வாதத்துக்கு வைத்துக்கொண்டாலும், அடுத்த முறை கூட்டணியில் இருந்தாலும் விசிக 'ஜீரோ' ஆகிவிடும். கீழே இருக்கும் தொண்டர்கள் ஜெல் ஆகமாட்டார்கள். ஓட்டு கன்வெர்ட் ஆகாது.
ஆதவ் அர்ஜுனா பிரச்சாரம் செய்வார்: ஆதவ் அர்ஜுனாவை கட்சியை விட்டு நீக்கினால் விசிகவுக்கு பாதிப்பு ஏற்படும். அவரை கட்சியை விட்டு நீக்கினால் அவர் என்ன மாதிரியான பிரச்சாரத்தை முன்னெடுப்பார் என்றால், நான் நம் தலைவருக்கு உரிய மரியாதை வேண்டும் என்று கேட்டேன், விசிகவுக்கு அதிகாரத்தில் பங்கு வேண்டும் எனக் கேட்டேன். நான் செய்த தவறு என்ன? என கேள்வி கேட்பார்.
ஆக்ஷன் எடுத்தாலும் சிக்கல்: இப்போது ஆதவ் அர்ஜுனாவை நீக்கினால், திருமாவளவன் திமுகவிடம் கட்டுண்டு கிடக்கிறார் என பிரச்சாரம் செய்வார். அதுதான் திருமாவளவனுக்கு நெருக்கடியாக இருக்கிறது. ஆதவ் அர்ஜுனா மீது முன்பே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இப்போது அவர் மீது நடவடிக்கை எடுத்தாலும் சிக்கல், எடுக்கவில்லை என்றாலும் சிக்கல்.
மேடையை திருமாவளவன் பயன்படுத்தி இருக்க வேண்டும்: இந்த மேடையில் ஆதவ் அர்ஜுனாவை ஏற விடாமல் திருமாவளவன் அந்த மேடையை பயன்படுத்தி இருக்கலாம். அந்த மேடையில் ஆதவ் அர்ஜுனா அரசியல் பேசக்கூடாது என அறிவுறுத்தி, தான் பேசி இருக்க வேண்டும். திமுக கூட்டணிக்கு ஆதரவாக பேசி அந்த நிகழ்வையே தன்வயப்படுத்தி இருக்கலாம்.
முதல் தவறு, ஆதவ் அர்ஜுனாவை இவ்வளவு தூரம் பேசவிட்டது. அவர் அக்டோபர் 27 ஆம் தேதி விஜய் மாநாட்டின்போது வெளியிட்ட பதிவுக்கே அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அப்போது வளரவிட்டு, இப்போது சிக்கிக் கொண்டுள்ளார்." இவ்வாறு தெரிவித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் மணி.
Weather Data Source: Wettervorhersage 21 tage