திபிலிசி: ஜார்ஜியா நாட்டில் உள்ள குடௌரி மலை விடுதியில் 12 பேர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். இதற்கிடையே உயிரிழந்த 12 பேரில் 11 பேர் இந்தியர்கள் என்று அந்நாட்டிற்கான இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. கார்பன் மோனாக்சைடு பாய்சனிங் காரணமாக இந்த உயிரிழப்பு நடந்து இருக்கலாம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பியாவில் உள்ள குட்டி ஜார்ஜியா.. இந்த நாட்டின் மொத்த மக்கள்தொகையே வெறும் 37 லட்சம் தான். பெரும்பாலும் சுற்றுலாத் துறையையே அதிகம் நம்பி இருக்கும் ஜார்ஜியாவுக்கு ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் பொதுமக்கள் செல்வார்கள்.
உயிரிழப்பு: இந்தியாவில் இருந்தும் கூட கணிசமான அளவு பொதுமக்கள் ஜார்ஜியாவுக்கு சுற்றுலா செல்வார்கள். இதன் காரணமாக இந்தியர்கள் பலர் அங்கு வேலை செய்தும் வருகின்றனர். இந்த நாட்டில் அழகிய பனி படர்ந்த மலைப் பிரதேசங்கள் இருக்கும் நிலையில், அங்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் ஆர்வமாக வந்து செல்வார்கள். அந்த மலைப் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ரிசார்ட் தான் குடௌரி.
இந்த குடௌரி ரிசார்ட்டில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு 12 பேர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். இதற்கிடையே அவர்களில் 11 பேர் இந்தியர்கள் என்பது இப்போது தெரிய வந்துள்ளது. இந்தத் தகவலை ஜார்ஜியா நாட்டிற்கான இந்தியத் தூதரகம் உறுதி செய்துள்ளது. கார்பன் மோனாக்சைடு பாய்சனிங் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
இந்தியத் தூதரகம்: இது தொடர்பாக இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஜார்ஜியாவின் குடாரியில் 11 இந்தியர்கள் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த செய்தியை அறிந்து இந்தியத் தூதரகம் வருத்தமடைகிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
உயிரிழந்தோரின் உடல்களைத் தாயகம் அனுப்பி வைக்கத் தேவையான நடவடிக்கைகளை உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து எடுத்து வருகிறோம். உயிரிழந்தோரின் குடும்பங்களுடன் தொடர்பில் இருக்கிறோம். இந்த விவகாரத்தில் எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வோம்" என்று அதில் கூறப்பட்டு இருந்தது. மேலும், உயிரிழந்தோரின் உடல்களில் காயங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது.
விசாரணை: அனைவரும் கார்பன் மோனாக்சைடு பாய்சனிங் காரணமாகக் காரணமாக உயிரிழந்து இருக்கலாம் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த விடுதியின் 2வது தளத்தில் இந்திய உணவகம் ஒன்று இயங்கி வந்தது. அதன் ரெஸ்டிங் ஏரியாவில் 12 பேரும் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜார்ஜியாவின் குற்றவியல் சட்டத்தின் 116வது பிரிவின் கீழ் அந்நாட்டின் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கவனக்குறைவால் ஏற்பட்ட உயிரிழப்பு என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
என் நடந்தது: கார்பன் மோனாக்சைடு பாய்சனிங் உயிரிழப்புக்குக் காரணமாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். ஏனென்றால் இவர்களின் படுக்கை அறைக்கு மிக அருகிலேயே ஜெனரேட்டர் ஒன்று இருந்துள்ளது. கடந்த டிசம்பர் 13 மின்சாரம் துண்டிக்கப்பட்ட பிறகு அது இயங்க தொடங்கியது. இதனால் ஏற்பட்ட வாயு லீக் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
இருப்பினும், எதுவும் உறுதியாகத் தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து தடயவியல் மருத்துவக் குழு விசாரணையில் இறங்கியுள்ளது. இன்னும் சில நாட்களில் எதன் காரணமாக மரணம் ஏற்பட்டது என்பது இன்னுமே தெளிவாகத் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.