ஆதாரம் தரவா? நிர்மலா சொன்னது பச்சைப் பொய்? : மணி பாய்ச்சல்

post-img

சென்னை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டில் இந்தி படிக்கவிடாமல் தன்னை கிண்டல் செய்ததாகக் கூறியிருந்த நிலையில், தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 2 லட்சம் பேருக்கு மேலாக இந்தி மொழி தேர்வு எழுதுகிறார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.
சில நாட்கள் முன்னதாக நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிய கருத்துகள் மிகப் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் தன்னை தமிழ்நாட்டில் இந்தி படித்ததற்காக இழிவாகப் பேசினார்கள். வந்தேறி எனக் கிண்டலடித்தார்கள். அதற்கு ஆதரவான சூழல் தமிழ்நாட்டு அரசியலில் நிலவுகிறது. மக்கள் அவர்களை ஆதரிக்கிறார்கள் என்று அதிரடியான கருத்துகளை முன்வைத்திருந்தார்.

மக்களவையில் நிர்மலா சீதாராமன் பேசுகையில், "தமிழ்நாட்டில் இந்தியில் மருத்துவம் படிக்க முடியும்" என்று வாய் தவறிப் பேசியவர் பின்னர் அதை மாற்றி தமிழில் படிக்க முடியும். அதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். "நான் இந்தி கற்கச் சென்றபோது என் பள்ளியை தவிர மற்ற இடங்களில் நான் கிண்டல் செய்யப்பட்டேன். 'தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டு வடமொழியான இந்தி படிக்கப் போகிறாயா?' என்றார்கள். அந்த சொற்கள் என் காதில் இப்போது ஒலித்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு இந்தியாவில் இல்லையா? இந்தி கற்றால் என்ன தவறு? இந்தி கற்பவர்களைப் பார்த்து வந்தேறி என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்கள்" என்று ஆவேசமாகப் பேசி இருந்தார்.
அதற்கு திமுக எம்பிக்கள் அவையில் கடும் எதிர்ப்பை பதியவைத்திருந்தனர். இந்நிலையில் மூத்த பத்திரிகையாளர் மணி இந்தச் சர்ச்சை பற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறார். மணி அளித்துள்ள பேட்டியில், "நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நான் அறிந்தவரை 1987இல் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்திருக்கிறார். அவர் படித்த காலகட்டத்தில் அங்கே இந்தி மொழி கற்பிக்கப்பட்டிருக்கிறது. அதைத்தாண்டி இந்தி பிரச்சார சபா 1930களில் இருந்து சென்னையில் இயங்கி வருகிறது. அதைக் காந்திதான் தொடங்கி வைத்தார். அதன் கிளை தமிழகம் முழுவதும் பரவலாக இருக்கின்றது. நிர்மலா படித்த திருச்சியில் இந்தி பிரசார சபாவின் கிளை இருந்தது. தமிழ்நாட்டில் இந்தி பிரசார சபாவில் கற்றுத் தருவதற்கு எந்தக் காலத்திலும் தடையே இருந்ததில்லை. அங்கே இந்தியைக் கற்றுத் தரக்கூடாது என்று திராவிடர் கழகமோ அல்லது திமுகவோ தடுத்ததே இல்லை.
கடந்த 2 ஆண்டுகள் முன்பே இதே மாதிரியான ஒரு கருத்தை நிர்மலா சீதாராமன் பேசி இருந்தார். அப்போது மூத்த பத்திரிகையாளர் விஜயசங்கர் அவரது ஃபேஸ்புக்கில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், நிர்மலா படித்த கல்லூரியில் இந்தி சொல்லிக் கொடுக்கப்பட்டதையும் அங்கே நிர்மலா சீதாராமனின் தோழி ஒருவர் படித்ததையும் சுட்டிக் காட்டி இருந்தார்.

அதற்கு மாறாக நிர்மலா மீண்டும் ஒரே கருத்தைப் பேசிவருகிறார். அவரை தமிழ்நாட்டில் இந்தி படிக்கவிடாமல் கிண்டல் செய்ததாகச் சொல்வது உண்மைக்குப் புறம்பானது. சமஸ்கிருத மொழியை எல்லோரும் படிக்க முடியாது. அதை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர்தான் படிக்க முடியும் என்ற நிலை இருந்ததால்தான், அந்த மொழி வளராமல் போய்விட்டது. சமஸ்கிருதம் நல்ல மொழி. அதைப் படிக்க முடியாத அளவுக்கு தடுத்தது யார்? அதைப் பற்றி கேள்வி எழுப்பினால், நிர்மலா பதில் சொல்வாரா?
ஒரு மந்திரி போல அவரது பேச்சு இருக்கவில்லை. மத்திய அமைச்சரவையில் 4வது இடத்தில் இருக்கிறார். கடந்த 7 ஆண்டுகளாகப் பதவியில் இருக்கிறார். உயர் பதவியில் இருக்கும் அவர் பச்சைப் பொய்யைச் சொல்கிறார். தமிழ்நாட்டில் இந்தி படிக்கவிடவில்லை என அவர் சொல்வது உண்மை இல்லை. நான் இந்தி பிரச்சார சபாவில்தான் இந்தி படித்தேன். 1965இல் மத்திய அரசு அலுவலகங்களில் இந்தியைக் கட்டாய அலுவல் மொழியாக மத்திய அரசு கொண்டுவந்தது. அதை எதிர்த்துத்தான் தமிழ்நாட்டில் இந்திக்கு எதிரான போராட்டம் நடந்தது. ஒரு அழுத்தமும் தராமலா மக்கள் போராட்டம் நடத்துவார்கள்? எவ்வளவு எழுச்சியாக நடந்தது. போராட்டத்தில் நியாயம் இருப்பதை உணர்ந்துதானே மத்திய அரசு இறங்கி வந்தது.

தமிழ்நாட்டில் உள்ளவர்கள் இந்திக்கு எதிரானவர்கள் இல்லை. இந்தி திணிப்பு பிரச்சினை என்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமே தொடர்பான பிரச்சினை இல்லை. மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, கர்நாடகா, வடக்கு கிழக்கு எனப் பல மாநிலங்களில் இந்திக்கு எதிரான இயக்கங்கள் இயங்கி வருகின்றன. இந்தி 41% மக்களுக்குத்தான் தாய்மொழி.
ஒரு புள்ளிவிவரம் என்ன சொல்கிறது தெரியுமா? ஆண்டு தோறும் இந்தி படிப்பவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இன்றைக்குத் தமிழகத்தில் 2 லட்சம் பேர் இந்தி தேர்வு எழுதுகிறார்கள். அதற்கு மாறாகப் பேசி இருக்கிறார் நிதியமைச்சர். அவரது பேச்சு அவைக் குறிப்பில் ஏற்றப்படும். நாளை வரலாற்றைப் படிப்பவர்கள் இவர் சொன்ன பொய்யைப் படிக்கப் போகிறார்கள். 140 கோடி மக்களுக்குப் பொதுவான அமைச்சர் இப்படிப் பொறுப்பு இல்லாமலா பேசுவது?
ப.சிதம்பரம் கூடத்தான் நிதியமைச்சராக இருந்துள்ளார். அவர் இப்படிப் பேசி இருக்கிறாரா? அருண் ஜேட்லி கூடத்தான் இருந்தார். அவையில் அவர் எப்படி கண்ணியமாகப் பேசினார். அவர்கள் வகித்த பதவியில் இவர் அமர்ந்துள்ளார். திமுகவுடன் அவருக்கு கருத்தியல் ரீதியாக முரண்பாடுகள் இருக்கலாம். அதற்காக தமிழ்நாட்டில் நடக்காத விசயத்தை ஏன் பேச வேண்டும்? அவர் மீது தனிப்பட்ட முறையில் என்றோ வைக்கப்பட்ட விமர்சனங்களைப் பேச வேண்டிய இடம் நாடாளுமன்றம் அல்ல. அதை அவர் வெளியே பேசவேண்டும். தமிழ்நாட்டுச் சட்டமன்றத்தில் பிராமணர்களுக்கு இடமே இல்லை. அதைவைத்து அவருக்குக் கோபம் ஏற்பட்டு இருக்கலாம். அதற்காக மக்களவையில் வந்தேறி என்று என்ன சொன்னார்கள். இந்தி படிப்பாதல் இழிவாகப் பார்த்தார்கள் என்று பேசுவதா?" என்று கூறியுள்ளார்.

Related Post