சென்னை: ஆளும் கட்சி கூட்டணியில் இடம்பெற்றிருந்த பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் திடீரென்று திமுகவுக்கு எதிரான கருத்துகளை வெளிப்படையாக முன்வைக்க ஆரம்பித்திருக்கிறார். அதற்கு என்ன காரணம்? பின்னணி என்ன?
விசிகவில் துணை பொதுச் செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா திமுக கூட்டணிக்கு தலைவலி தரும் நபராகக் கடந்த வாரம் வரை இருந்துவந்தார். அவரை சரி கட்டுவதற்குள் திருமாவளவன் படாதபாடு பட்டு, ஆதவ் அர்ஜுனாவை இடைநீக்கம் செய்ததன் மூலம் பிரச்சினைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தார்.
திமுக கூட்டணிக்குள் நிலவிய சலசலப்பு ஒருவழியாக அடங்கிவிட்டது என நினைத்தபோது அடுத்த குண்டை தூக்கிப் போட்டுள்ளார் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனரும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன். கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரின் போதே அவருக்கும் பொதுப் பணித்துறை அமைச்சர் துரைமுருகனுக்கும் இடையே ஒரு மோதல் எழுந்தது. வேல்முருகன் தனது தொகுதிக்குள் பொதுப்பணித்துறை சார்ந்த ஒரு திட்டங்களும் நிறைவேற்றப்படவே இல்லை என்று கொந்தளித்துப் பேசி இருந்தார். அதற்கு அடுத்த பட்ஜெட்டில் முடிந்தால் பார்க்கலாம்’ என்று அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
இதனைக் கேட்டு மேலும் கோபமடைந்த வேல்முருகன் வெளியே வந்து திமுக அரசையும் அமைச்சர்களையும் விமர்சித்து பேட்டிகள் அளித்தார். இப்போது பெய்த ஃபெஞ்சல் புயலில் கடலூர் மாவட்டம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இழப்பீடாக குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாயை அரசு அறிவித்திருந்தது. இந்தத் தொகை போதுமானதாக இல்லை என்பதுடன் அரசு பாரபட்சமாக நடந்து கொள்கிறது என்றும் வேல்முருகன் அவையில் பேசி இருந்தார்.
சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்ததும் செய்தியாளர்களைச் சந்தித்த வேல்முருகன், “வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 2 நாட்கள் மட்டுமே சட்டமன்றம் நடந்துள்ளது. திமுக தன் தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டமன்றக் கூட்டத்தொடரை நடத்துவோம் என்று வாக்குறுதி அளித்தது. கடலூர் மாவட்டத்தில் உள்ள என் தொகுதி வெள்ளத்தில் தத்தளிக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் கேட்டேன். குறைந்த பட்சம் 6 ஆயிரம் தர கோரிக்கை வைத்தேன். சென்னை வெள்ள பாதிப்புக்காக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வீடு, எம்.ஆர்.எஃப் முதலாளி, இந்தியா சிமெண்ட் முதலாளி வீடுகளுக்கு எனப் பாரபட்சம் பார்க்காமல் கொண்டு போய் 6 ரூபாய் கொடுத்தார்கள்.
ஆனால், கடலூர் மாவட்ட வெள்ள பாதிப்புக்கு 2 ஆயிரம் கொடுக்கிறார்கள். வட தமிழ்நாடு என்ன பாவம் செய்தது? எங்களுக்கு என்ன பிச்சையா போடுகிறீர்கள்? கொழுப்பு எடுத்துப் போய் கள்ளச்சாராயம் குடித்துச் செத்தவனுக்கு 10 லட்சம் கொடுக்கிறீர்கள். கூட்டணி வைக்கும்போது திமுக தலைவர்கள் எனக்குப் பேசுகிறார்கள். வெற்றி பெற்று அமைச்சராகிவிட்ட பிறகு அமைச்சர் பேச மாட்டார். அவர் வீட்டு உதவியாளர்கள் பேசுகிறார்கள். ஏன் அமைச்சர் பேச மாட்டாரா? எங்கிருந்து வருகிறது அதிகார போதை?” என மனதில் சில ஆண்டுகளாக மறைத்து வைத்த ஆதங்கத்தை எல்லாம் கொட்டித் தீர்த்துள்ளார்.
உண்மையில் வேல்முருகன் பிரச்சினை என்ன? அவர் இந்த அளவுக்கு திமுகவை விமர்சிப்பது ஏன்? என விசாரித்தால் சில தகவல்களை அவரது நெருங்கிய வட்டாரம் பகிர்ந்து கொண்டுள்ளது. இதை வேல்முருகனே அவர்களிடம் சுட்டிக் காட்டி ஆதங்கப்பட்டிருக்கிறார்.
பண்ருட்டி வேல்முருகன் தனிக் கட்சியாக இருந்தாலும் அவர் திமுக சின்னத்தில் நின்றுதான் வெற்றி பெற்றுள்ளார். அதனால் அவர் திமுக உறுப்பினர் பட்டியலில்தான் வருகிறார். மேலும் பாமக கூட்டணியில் இல்லாததால் வேல்முருகனை திமுக கூட அரவணைத்துக் கொண்டது. ஆனால், அவர் வளர்ச்சியை திமுக இரண்டாம் கட்ட தலைவர் விரும்பவில்லை. மாவட்ட அளவில் உள்ள அமைச்சர்களும் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களும் ராமதாஸுக்கு ஆதரவாகவே உள்ளனர். வேல்முருகனை ஒரு பொருட்டாக அவர்கள் மதிப்பதில்லை என்கிறார்கள்.
அதாவது 10.5% வன்னியர் உள் ஒதுக்கீடு சம்பந்தமாக சில வன்னியர் தலைவர்களை அழைத்துக் கொண்டு முதல்வர் ஸ்டாலினைச் சந்திக்க வேல்முருகன் நேரம் கேட்டுள்ளார். ஆனால், கடந்த 3 வருடங்களாக அதிகாரிகள் யாரும் அவருக்கு நேரம் ஒதுக்கித் தரவில்லையாம். அதற்கு திமுக அமைச்சர்கள் முட்டுக்கட்டை போடுகிறார்களாம். அதை வேல்முருகனே தன் நெருக்கமான ஊடக நண்பர்களிடம் குறிப்பிட்டுக் கூறியிருக்கிறார். ஆனால், உள் ஒதுக்கீடு சம்பந்தமாக அன்புமணி கேட்டால் உடனே முதல்வரைச் சந்திக்க நேரம் தருகிறார்களாம். டாக்டர் ராமதாஸ் கேட்டால் உடனடியாக சந்திப்பு நடக்கிறதாம். தான் கேட்டால் முதல்வரைச் சந்திக்க அனுமதி வழங்கப்படுவதில்லை என்று குமுறுகிறார் வேலு.
திமுக கூட்டணி உருவான போது வேல்முருகன் சீனியர் என்பதால் துணைச் சபாநாயகர் பதவி தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. அப்படி இல்லை என்றால் வாரியத் தலைவர் பதவி கொடுப்போம் என்றும் கூறியுள்ளது திமுக தலைமை. வெற்றி பெற்ற பிறகு அதைப் பற்றி கண்டுகொள்ளவே இல்லையாம். இன்னும் சொல்லப் போனால் சட்டமன்றம் உறுப்பினர் மேம்பாட்டு நிதியைக் கூட இவரால் செலவு செய்ய முடியவில்லையாம்.. திமுக ஒன்றிய செயலாளர் முடிவு செய்கிறார் என்று புலம்பி இருக்கிறார் வேல்முருகன்.
ஆகவே, செயற்குழு கூட்டத்தை விரைவில் கூட்டி ஒரு முடிவை எடுக்க இருக்கிறார் வேல்முருகன். அவர் பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறார் என்று உறுதியாகச் சொல்கிறது தவெக வட்டாரம். இதே நிலை தொடர்ந்தால், வரும் தேர்தலில் தொகுதியை தக்க வைக்க முடியாது. மக்கள் கொந்தளித்துப் போய் உள்ளனர். அவர்களின் பல்ஸ் அறிந்தே இந்த முடிவை எடுத்திருக்கிறார் வேல். இதற்கு நடுவே அதிமுகவில் உள்ள வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் வேல்முருகனை அழைத்து ஆறுதல் சொல்லி இருப்பதாகவும் தகவல் கசிகிறது. எப்படிப் பார்த்தாலும் விரைவில் திமுகவுக்கு எதிராக ஒரு 'வேல்’ கம்பு பாய இருக்கிறது.