நியூயார்க்: விண்கற்களால்தான் ஒரு காலத்தில் டைனோசர்கள் இந்த பூமியிலிருந்து அழிந்தன. அதேபோன்ற விண்கற்கள் இன்று பூமிக்கு மிக நெருக்கமாக கடந்து செல்ல இருப்பதாக நாசா எச்சரித்துள்ளது. ஆனால் பாதுகாப்பான தூரத்தில்தான் விண்கற்கள் செல்வதால் நமக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் நாசா தெரிவித்திருக்கிறது.
நாம் வாழும் பூமி மிகவும் அற்புதமானது. கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் ஊர் பெயரே தெரியாத சில விண்கற்கள் எல்லாம் ஒன்று சேர்ந்துதான் இந்த பூமியை உருவாகியது. நாம் நின்று கொண்டிருக்கும் மண்ணும், பாறையும் வேறு எங்கோ இருந்து வந்ததுதான். ஆனால் உயிர் வாழ வாய்ப்பு கொடுத்த இதே விண்கற்கள்தான், நம் உயிரையும் எடுக்க ரெடியாகி வருகிறது. அதாவது பூமியை நெருக்கமாக கடந்து செல்ல இருக்கும் விண்கற்கள், பாதை மாறி பூமி மீது மோதினால் பேரழிவு ஏற்படும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
அந்த வகையில் இன்று 2 விண்கற்கள் பூமிக்கு நெருக்கமாக கடந்து செல்ல இருக்கிறது. 2024 XY5 மற்றும் 2024 XB6 என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கற்கள்தான் அது. இந்த விஷயத்தை நாசா உறுதி செய்திருக்கிறது. இதில் முதல் விண்கல்லான 2024 XY5, சுமார் 35 லட்சம் கி.மீ தொலைவில் பூமியை கடந்து செல்கிறது. இந்த தூரம் பூமிக்கும் நிலவுக்கும் இடைப்பட்ட தூரத்தை விட 16 மடங்கு அதிகமாகும். மணிக்கு 17,388 கி.மீ வேகத்தில் பறந்து செல்கும் இந்த விண்கல், தன் பாதையிலிருந்து கொஞ்சம் விலகினாலும் கூட பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
ஒருவேளை இந்த கல் பூமியை தாக்கினால், அது விழுந்த இடத்தில் 31 மெகா டன் அளவுள்ள வெடிபொருள் வெடித்த பாதிப்பை உருவாக்கும். மட்டுமல்லாது 1.5 கி.மீ விட்டத்திற்கும், 500 மீ ஆழத்திற்கும் பெரிய பள்ளம் உருவாகும். தவிர ரிக்டர் அளவில் 8 புள்ளியில் நிலநடுக்கம் ஏற்படும். ஒருவேளை கடலில் விழுந்தால் கல் விழுந்த இடத்திலிருந்து 500 கி.மீ சுற்றளவுக்கு பெரிய சுனாமி ஏற்படும். கல் விழுந்தவுடன் அந்த இடத்தை சுற்றி 10 கி.மீ விட்டத்திற்கு புல் பூண்டு கூட மிஞ்சாது. குறைந்தபட்சம் 100 கி.மீ சுற்றளவுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படும். மொத்தத்தில் மனித குலம் சந்தித்திராத பேரழிவு ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
இரண்டாவதாக உள்ள விண்கல் 2024 XB6. இது சைஸில் கொஞ்சம் சிறியது. வெறும் 56 அடி மட்டுமே உள்ள இந்த கல், 66.7 லட்சம் கி.மீ தொலைவில், மணிக்கு 23,786 கி.மீ வேகத்தில் பூமியை கடந்து செல்கிறது. தூரத்தை வைத்து பார்க்கும்போது, எங்கோ செல்லும் விண்கல்தானே! என்று கேட்க தோன்றலாம். ஆனால் 66 லட்சம் கி.மீ எல்லாம் விண்வெளியை பொறுத்தவரை ஒன்றுமே இல்லை. அதாவது பூமிக்கும் செவ்வாய்க்கும் 2 கோடி கி.மீ தொலைவு இருக்கிறது. அப்படியெனில் வெறும் சில லட்சம் கி.மீ என்பது பூமிக்கு நெருக்கமானதே!
இதேபோன்ற விண்கற்கள்தான் டைனோசர்களை அழித்தன. அதாவது விண்கற்கள் மோதியதால் பூமியில் எரிமலை வெடிப்பும், காட்டு தீயும் கட்டுக்கடங்காமல் ஏற்பட்டது. இது முதலில் சின்ன சின்ன உயிர்களை கொன்றது. அதன் பின்னர், வளிமண்டலம் முழுவதையும் புகையால் சூழ்ந்து சூரிய வெளிச்சம் பூமிக்குள்ளே வரவிடாமல் செய்தது. இதன் மூலம் செடி, கொடி, மரங்கள் உணவை உற்பத்தி செய்ய முடியாமல் அழிந்தன. அது சைவ பிராணிகளின் எண்ணிக்கையை குறைத்தது.
இதனால் டைனோசரின் உணவு சங்கிலி பாதிக்கப்பட்டது. மறுபுறம் மூச்சு திணறல் காரணமாகவும் டைனோசர்கள் உயிரிழந்தன என்பது குறிப்பிடத்தக்கது.