நாமக்கல்: நாமக்கல்லில் இருந்து ஓமனுக்கு அனுப்பப்பட்ட 2 கோடி முட்டைகளை கப்பலில் இருந்து இறக்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. ஓமனுக்கு அனுப்பப்பட்ட ரூபாய் 15 கோடி மதிப்புள்ள முட்டைகள் இறக்குமதி செய்யப்படாமல் கப்பலிலேயே இருந்த நிலையில், இன்று பேச்சுவார்த்தைக்குப் பிறகு முட்டைகளை இறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில், 1,000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு, 7 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றின் மூலம், தினசரி 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள், தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாடு, வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
அந்தவகையில் ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கும் நாமக்கல் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அண்மையில், ஓமன் நாடு, இந்திய முட்டைகளுக்கு புதிய இறக்குமதி அனுமதி வழங்குவதை நிறுத்துவதாக அறிவித்தது. இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் எடை 60 கிராம் இருக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
ஆனால், இங்கிருந்து அனுப்பப்படும் முட்டை ஒவ்வொன்றும் 52 கிராம் எடை கொண்டவை. இதன் காரணமாக, துாத்துக்குடி, கொச்சியில் இருந்து ஓமனுக்கு, 45 கன்டெய்னர்களில் அனுப்பப்பட்ட முட்டைகளை இறக்க ஓமன் நாட்டு அரசு அனுமதிக்கவில்லை.
இதனால், 15 கோடி ரூபாய் மதிப்புள்ள, 2 கோடி முட்டைகள் 40 கன்டெய்னர்களில் கடலில் கப்பலிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஓமன் நாட்டின் முடிவால் முட்டை ஏற்றுமதி மேலும் பாதிக்கும் அபாயம் உள்ளதால், ஏற்றுமதியாளர்கள் கவலை அடைந்தனர். முட்டைகளை ஓமனில் இறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக எம்.பிக்கள் வெளியுறவு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
நாமக்கல்லிருந்து ஓமன் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ரூ.15 கோடி மதிப்பிலான முட்டைகள் தற்போது அந்நாட்டின் துறைமுகத்தில் கப்பலில் உள்ளது. நாமக்கல்லில் இந்து ஏற்றுமதி செய்யப்பட்ட முட்டைகளை உடனே இறக்குமதி செய்யதிடவும் அதே போன்று கத்தார் நாட்டில் முட்டை ஏற்றுமதியில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்கிடவும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் ராஜ்யசபா எம்.பி கே.ஆர்.என்.ராஜேஷ்வரன், நாமக்கல் மக்களவை தொகுதி எம்.பி மாதேஸ்வரன் ஆகியோர் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், நாமக்கல்லில் இருந்து ஓமனுக்கு அனுப்பப்பட்ட 2 கோடி முட்டைகளை கப்பலில் இருந்து இறக்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. ரூபாய் 15 கோடி மதிப்புள்ள முட்டைகள் இறக்குமதி செய்யப்படாமல் கப்பலிலேயே இருந்த நிலையில், இன்று நடைபெற்ற 2வது கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு முட்டைகளை இறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், நாமக்கல் முட்டை ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.