திமுக அமைச்சர்கள் மகாராஜா மனப்பான்மையில் உள்ளனர்.. வானதி சீனிவாசன் விமர்சனம்

post-img
கோவை: மழை வெள்ளம், அதானி விவகாரம் தீவிரமடைந்து வருகிறது. அதிமுக, பாஜகவினர் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், முதல்வர் எந்த உலகத்தில் வாழ்ந்து வருகிறார் என்று தெரியவில்லை. அமைச்சர்கள் பலரும் மகாராஜா மனநிலையில் இருக்கிறார்கள் என கடுமையாக விமர்சித்துள்ளார். கோவை மா.ந.க வீதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பாஜக எம்எல்ஏ. வானதி சீனிவாசன் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்துகொண்ட வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கோவை மாநகராட்சி பகுதிகளில் குப்பைகள் சரியாக எடுக்கப்படாததால் மிகப்பெரிய சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குப்பை வண்டிகள் இல்லாதது, தூய்மை பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக மிகவும் தாமதமாக குப்பைகள் எடுக்கப்படுகின்றன. அதிகமான வருவாய் கொடுக்கும் கோவை மாநகராட்சியில், மக்கள் தரமான வாழ்வதற்கு கட்டமைப்பை மாநில அரசு ஏற்படுத்தி தராதது கண்டனத்துக்குரியது. தமிழகம் மாதிரியான மிகப்பெரிய மாநிலத்தில் பிரச்னைகளை பற்றி ஆக்கப்பூர்வமாக விவாதம் நடத்த சட்டமன்ற கூட்டத்தொடர் நாட்களை குறைத்தது ஏமாற்றமாக உள்ளது. உரையை விரைவில் முடிக்க சொல்வதுடன் அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்கப்படுவதில்லை. அதனால் மக்கள் பிரச்னைகளை கொண்டு செல்ல முடிவதில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன் வருடத்துக்கு 100 நாட்கள் சபை நடத்துவோம் என கொடுத்த வாக்குறுதி எல்லாம் காற்றில் பறக்க விடப்பட்டது. திமுகவை பொறுத்தவரை மத்திய அரசை எதிர்க்க வேண்டும். மத்திய அரசுக்கு எதிராக அரசியல் செய்வதன் வாயிலாக தங்களை நிலை நிறுத்திக் கொள்ள முடியும் என்பது மட்டும் தான் திமுகவின் நிலைப்பாடு. பல்வேறு துறைகளில் மாநில அரசு தோல்வியை சந்தித்து வருகிறது. மாநில அமைச்சர்கள் வரும் போது மக்களால் காட்டப்படும் கோவம் என்பது 5% தான். எப்போது இந்த ஆட்சியை தூக்கி எறிவோம் என காத்திருக்கிறார்கள். முதல்வரும், அமைச்சர்களும் இதை சிறிதும் பொருட்படுத்தாமல் உள்ளனர். இதற்கான பலனை 2026 சட்டமன்ற தேர்தலில் அனுபவிப்பார்கள். மக்களின் பிரச்னையை காது கொடுத்து கேட்க கூட அரசு தயாராக இல்லை. சாலைகள் எங்கும் சரியில்லை. அதற்கென்று கொடுக்கின்ற நிதி எங்கு செல்கிறது. நிதி ஒதுக்கீடு என்று சொன்னாலும் வேலைகள் எதுவும் நடப்பதில்லை. கோவை அரசு மருத்துவக் கல்லூரி அடுக்குகள் கொண்ட வாகன நிறுத்துமிடம் வேண்டும் என கேட்டதற்கு சாத்தியமில்லை என்கின்றனர். வாகன பெருக்கம் அதிகரிக்கும் நிலையில் நவீன வகையில் வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும். ஆனால் எந்த தொலைநோக்கு பார்வையும் இல்லாத அரசிடம் எதை எதிர்ப்பார்க்க முடியும். திமுக அமைச்சர்கள், முதல்வர் எந்த உலகத்தில் வாழ்ந்து வருகின்றனர். ஊடகத்தில் அமைச்சர்களின் பதில்கள், நடைமுறையில் என்ன என்பதை சமூக வலைதளங்களில் இளைஞர்கள் பதிவிடுகின்றனர். மகாராஜா மனப்பான்மையில் தான் அமைச்சர்கள் உள்ளனர். நீர் மேலாண்மையில் முன்னோர்கள் மிக அழகாக திட்டமிட்டு உருவாக்கி விட்டு சென்ற நிலையில், ஆளுங்கட்சி அதிகாரிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு, குடியிருப்புகள் அனுமதிப்பது, உயர் நீதிமன்ற உத்தரவிட்ட இடங்களிலும் செய்யப்படுவதில்லை. அதற்கான மாற்று ஏற்பாடும் செய்வதில்லை. நீர் நிலை ஆக்கிரமிப்பு நீக்கப்படாததால் மழை காலங்களில் அதற்கு அதிகமான கோடிகளை மக்கள் வரிப் பணத்தில் செலவிட வேண்டி உள்ளது. அதானியை நான் சந்திக்கவில்லை என முதல்வர் சொல்கிறார். இது மாப்பிள்ளையின் அரசாங்கம் என திமுகவினர் சொல்கின்றனர். எங்கள் மாநில தலைவர் முன் வைத்த குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லுங்கள். வெற்றிப் பெற்றவர்களுக்கு சட்டமன்றத்தில் பதில் சொல்வதற்கு கூட மின்சாரத்துறை அமைச்சர் இல்லை என கூறுகிறார்." என்றார்.

Related Post