வட மாநிலங்களில் வெளுத்து வாங்கும் கன மழை... பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..!

post-img

டெல்லி, குஜராத், பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், உத்தராகண்ட் மாநிலங்களில் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் பல அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ஐடிஓ பகுதியில் தண்ணீர் தேங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுந்தர் நகரில் உள்ள சந்தையின் சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது. ரோஹினி பகுதியில் திடீரென சாலையில் மிகப்பெரிய பள்ளம் உருவானது. இதனால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளை மாநில பொதுப் பணித் துறை அமைச்சர் அதிஷி பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 24 மணிநேரத்தில் 15 சென்டிமீட்டருக்கும் மேல் மழை பதிவாகியுள்ளதாக கூறினார். இது ஜூலை மாதத்தில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத மழைப்பொழிவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

யமுனை ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராமில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.பஞ்சாப் மாநிலத்தின் சண்டிகரில் கனமழையால் சுக்னா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மொகாலியில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. மேலும், வாகனங்களும் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

மாநிலத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மொகாலியில் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து 80-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட்டில் உள்ள அஷாபுரா அணையிலிருந்து அதிக அளவில் நீர் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக நகரங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.துவாரகா நகரில் கனமழையால், பல்வேறு பகுதிகளும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவிலும் கனமழை காரணமாக, பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மொராதாபாத் பிரிவில் 17 ரயில்கள் ரத்துசெய்யப்பட்டன. பல்வேறு ரயில்கள் பாதி வரை மட்டுமே இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் உதம்பூர் பகுதியில் கனமழையால், மூன்று பகுதிகளை இணைக்கும் பாலம் அடித்துச் செல்லப்பட்டது.

இதேபோல, ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சப்பா சேரி பகுதியில் உள்ள சாலை நீரில் அடித்துச் செல்லப்பட்டது. ராம்பன் பகுதியில் உள்ள சுரங்கச் சாலையும் நீரில் அடித்துச் செல்லப்பட்டதால், நெடுஞ்சாலை மூடப்பட்டது. ஜம்மு நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று, காண்டோ பகுதியில் மண்சரிவில் சிக்கிக் கொண்டது. இதில், 2 பேர் மீட்கப்பட்ட நிலையில், 2 பேர் உயிரிழந்தனர்.உத்தராகண்ட் மாநிலத்தில் பெய்யும் மழையால், சம்பாவட் மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக, பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது.

Related Post