பெங்களூர்: உலகின் பல டெக் நிறுவனங்களும் இப்போது ஏஐ சார்ந்து நகர்ந்து வரும் நிலையில், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற பெரு நிறுவனங்களும் இந்தியாவில் உள்ள 27 வயது இளைஞரிடம் இதற்காக வந்துள்ளது.
கர்நாடகாவில் இருக்கும் சின்ன கிராமம் அகாரா.. நெற்பயிர்கள் மற்றும் கடை வயல்களால் சூழப்பட்ட இந்த கிராமத்தில் வசித்து வரும் இளம்பெண் ப்ரீத்தி.. இவர் நாள் முழுக்க தையல் இயந்திரத்தில் வேலை செய்தாலும் மாதம் ரூ. 5000 குறைவான வருமானமே கிடைக்கும்,
ஆனால், இப்போது அவர் செய்யும் வேலையே வேறு. இந்த வேலையில் வெறும் 4, 5 நாட்களில் அவரால் ரூ.5000க்கும் அதிகமாகச் சம்பாதிக்க முடிகிறது. அப்படி அவர் என்ன செய்கிறார் எனக் கேட்கிறீர்களா.. அது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
வாழ்க்கையே மாறிப்போச்சு: இப்போது தையல் இயந்திரத்திற்கு அருகே அமர்ந்து, மொபைலில் தனது தாய் மொழியான கன்னட மொழியில் ஒரு வாக்கியத்தைப் படித்துக் காட்டுகிறார். கொஞ்சம் கேப் விட்டு அடுத்த வரியைப் படிக்கிறார். யாருக்கோ கன்னட மொழியைச் சொல்லித் தருவதைப் போல ஒவ்வொரு வரியாக மெல்ல படித்துக் காட்டுகிறார். உண்மையில் அவர் கற்றுத்தான் கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், மனிதருக்கு இல்லை.. ஏஐ கருவிகளுக்கு.!
ஏஐ கருவிகள் அனைத்து மொழிகளிலும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் பெரு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளது. அதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ப்ரீத்தி மட்டுமின்றி அங்கே சுமார் 70 பேர் இதுபோல கன்னட மொழியை ஏஐ கருவிகளுக்குச் சொல்லித் தர பணியமர்த்தப்பட்டுள்ளனர். கார்யா என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் தான் இவர்களை பணியமர்த்தி இருக்கிறது. ஏஐ தொழில்நுட்பங்களுக்காக வாய்ஸ், டெக்ஸ்ட், போட்டோக்களை சேகரிக்கும் நடவடிக்கையில் கார்யா செயலி இறங்கி இருக்கிறது.
27 வயது இளைஞர்: கார்யா கடந்த 2021இல், சார்ஜிபிடி வருகைக்கு முன்பே, தொடங்கப்பட்ட ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனமாகும். இருப்பினும், சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ கருவிகளின் வருகையே இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று இருக்கிறது. மற்ற டேட்டே சேகரிக்கும் நிறுவனங்களைப் போல இல்லாமல் இவர்கள் கிராமத்தில் இருப்போருக்கு, அதிலும் குறிப்பாகப் பெண்களுக்கு வேலை தருகிறார்கள். மேலும், கிராமத்தில் கிடைக்கும் ஊதியத்தைக் காட்டிலும் அதிக சம்பளம் தருவதால் பலரும் விரும்பி வேலை செய்கிறார்கள்.
பொதுவாகப் பெரு நிறுவனங்கள் சர்வதேச அளவில் தரவுகளைச் சேகரிக்க இதுபோன்ற நிறுவனங்களுக்குத் தான் ஒப்பந்தம் தருவார்கள். பெரும்பாலான நிறுவனங்கள் அதிகப் பணத்தை தாங்கள் எடுத்துக் கொண்டு வேலை செய்வோருக்கு மிகக் குறைந்த ஊதியத்தையே கொடுப்பார்கள். இந்தியா உட்பட பல நாடுகளில் இயங்கி வரும் நிறுவனங்கள் இதைத்தான் செய்வார்கள். ஆனால், இந்த நிலையை மாற்றிச் சரியான ஊதியம் தர வேண்டும் என்பதே கார்யா இலக்கு என்கிறார் 27 வயதான மனு சோப்ரா,
உலக நிறுவனங்கள்: மனு சோப்ரா தான் கார்யாவை ஆரம்பித்தவர்.. சரியான ஊதியத்தைத் தருவது மட்டுமின்றி, டெக் நிறுவனங்களுக்கு உயர் தரத்திலான டேட்டாக்கள் சென்று சேர்வதை மனு சோப்ரா உறுதி செய்கிறார். இதன் காரணமாகவே இந்த 27 வயது இளைஞருடன் உலகின் டாப் நிறுவனங்களும் கை கோர்த்துள்ளன. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அதன் அனைத்து ஏஐ சாதனங்களின் ஸ்பீச் டேட்டாவுக்கு ஏஐ கருவிகளையே நம்பி இருக்கிறது. பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையும் ஏஐ கருவிகளில் பாலின சார்புகளைக் குறைக்க, கார்யாவுடன் இணைந்து செயல்படுகிறது.
இது மட்டுமின்றி கூகுள் நிறுவனம் கார்யா நிறுவனம் மூலம் 85 இந்திய மாவட்டங்களில் இருந்து ஸ்பீச் டேட்டாவை சேகரித்து வருகிறது. இந்தியாவில் பேசப்படும் 125 மொழிகள் மற்றும் பேச்சுவழக்குகளில் தங்கள் ஏஐ கருவிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டே கூகுள் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கார்யா இந்தியாவுடன் நின்றுவிடவில்லை. இதேபோன்ற பணிகளை ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் விரிவுபடுத்தும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது.
பெரு நிறுவனங்களின் நடவடிக்கையால் பொதுவாக வேலையிழப்பு மட்டுமே இருக்கும் என்று கூறப்படும் நிலையில், அதை மாற்றி பலருக்கும் வேலை கொடுத்து நல்ல ஊதியத்தையும் கொடுத்து வருகிறது கார்யா. இதன் காரணமாகவே உலகின் டாப் டெக் நிறுவனங்களும் கூட இந்த 27 வயது இளைஞரை நம்பி இருக்கிறது.