Allu Arjun Pushpa 2: புஷ்பா 2 சிறப்பு காட்சி: ஹைதராபாத்தில் போலீஸ் தடியடி- நெரிசலில் சிக்கி பெண் பலி!

post-img

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் புஷ்பா-2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் பலியானார். இந்த நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் மயமக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செம்மரக்கட்டை கடத்தலை மையமாக வைத்து அல்லு அர்ஜூன் நடித்திருந்த புஷ்பா திரைப்படம் 3 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து புஷ்பா 2 என இந்தப் படத்தின் 2-வது பாகம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் 12,000 திரையரங்குகளில் புஷ்பா 2 திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்த புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் பல திரையரங்குகளில் வெளியிடப்பட்டன. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சியை அல்லு அர்ஜூன் உள்ளிட்ட படக் குழுவினர் ரசிகர்களுடன் ரசித்தனர். இந்த சிறப்புக் காட்சிக்காக நேற்று இரவு முதலே சந்தியா திரையரங்கில் பெரும் எண்ணிக்கையில் ரசிகர்கள் கூடியிருந்தனர்.
குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் என பலரும் நெரிசலில் சிக்கி மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹைதராபாத் சந்தியா திரையரங்கில் ரசிகர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடியும் நடத்தினர். அப்போது ரசிகர்கள் சிதறி ஓடிய நிலையில் பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.

Related Post