மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு 48 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் பிரியாவிடை!

post-img
சென்னை: மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடந்த நவம்பர் 27 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் சார்ந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சையளித்து வந்தனர். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இன்று இறுதி அஞ்சலி செலுத்தினர். ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல் சென்னையில் இன்று தகனம் செய்யப்பட்டுள்ளது. மணப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்த அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு முகலிவாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு தமிழக அரசு சார்பில் அரசு மரியாதை வழங்கப்பட்டுள்ளது. 48 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக தமிழக அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பில், "தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமியின் பேரனும், ஈ.வெ.கி.சம்பத் சுலோசனா சம்பத் மகனும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான திரு. ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் 14.12.2024 அன்று இயற்கை எய்தினார். கடந்த 21.12.1948-இல் ஈரோட்டில் பிறந்த இவர், இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக 1996 முதல் 2002 வரை பணியாற்றினார். 2004- நாடாளுமன்ற உறுப்பினராக கோபிச்செட்டிப்பாளையம் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், ஒன்றிய அரசில் ஜவுளித்துறை இணை அமைச்சராகப் பொறுப்பேற்று சிறப்பான முறையில் பணியாற்றினார். தமிழ்நாட்டு அரசியல் மட்டுமல்லாது இந்திய அரசியலிலும் சிறப்பாக மக்கள் பணியாற்றினார். அரசியல், மக்கள் பணி, பொது வாழ்வு என அனைத்து தளங்களிலும் நீண்ட அனுபவம் கொண்டவர். தன் சிந்தனைக்குச் சரியாகப் பட்டதை துணிவுடன் வெளிப்படுத்தியவர். அவரை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கும், காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கும், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி மக்களுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது பொது வாழ்வைப் போற்றும் விதமாக அவரது திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related Post