கரூர்: ரூ.10 லட்சம் மதிப்பிலான சிலைகளுக்கு அரசு அதிகாரிகள் சீல் வைத்ததாக பாஜக குற்றம்சாட்டிய நிலையில், அது குறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் விளக்கம் கொடுத்து வருகிறார்.
கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் ட்விட்டரில், "திருட்டு திராவிட அரசின் கேவலமான செயல். எல்லாம் வட்டிக்கு காசு வாங்கி பண்ண சிலைங்க அய்யா, தயுவுசெஞ்சி விட்டுடுங்க. காவலர்களிடம் கண்ணீர் மல்க கெஞ்சிய பெண். மனிதாபிமானமற்ற அதிகாரிகள் 10 லட்சம் மதிப்புள்ள விநாயகர் சிலைகளுக்கு சீல் வைத்தனர்.
இந்துக்களுக்கு மட்டுமல்ல, ஏழை தொழிலாளர்களுக்கு எதிரான அரசு இது என்பதற்க்கு இந்த நிகழ்வே சாட்சி. கரூர் ஆட்சியர், கரூர் போலீஸ் உரிய நேரத்தில் தகுந்த நடவடிக்கை எடுத்து ஏழை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்குமாறு தயவு செய்து கேட்டுக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு விளக்கமளித்துள்ள கரூர் ஆட்சியர், "விநாயகர் சிலைகள் நிறுவதல் வழிபாடுகள் மற்றும் சிலைகள் கரைத்தல் ஆகிய நிகழ்சிகளின்போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து அரசாணை எண்.596/2018 பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு-பி)த் துறை நாள் 09.0.82018 ன் படியும் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் Original Application No:129 of 2023 (sz) Dated 05.09.2023-ன்படியும் விநாயகர் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டதும் சுடப்படாததும் மற்றும் எவ்வித இரசாயன கலவை அற்றதுமான சுற்றுச்சுழுலை பாதிக்காத மூலப்பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே வழிபாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் என்றும், தடை செய்யப்பட்ட மாசு ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டர் ஆப் பாரீஸ் போன்ற பொருட்களால் ஆன சிலைகளை நிறுவக்கூடாது எனவும், மேலும், நீரில் கரையும் நன்மையுடைய மற்றும் தீங்கு விளைவிக்காத இயற்கை வர்ணங்கள் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே நிறுவ வேண்டும் என தெளிவான வழிகாட்டி நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கடந்த 13.09.2023 அன்று விநாயகர் சதுர்த்தியினை முன்னிட்டு சிலை வைப்பது மற்றும் கரைப்பது குறித்தும் விநாயகர் சிலை அமைக்கும் அமைப்பாளர்களுடன் நடைபெற்ற ஆலோசணை கூட்டத்தில் விநாயகர் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டதும் / சுடப்படாததும் மற்றும் எவ்வித இரசாயன கலவை அற்றதுமான சுற்றுச்சுழுலை பாதிக்காத மூலப்பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே வழிபாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் என்றும், தடை செய்யப்பட்ட மாசு ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டர் ஆப் பாரீஸ் போன்ற பொருட்களால் ஆன சிலைகளை நிறுவக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரூர் வட்டம், தாந்தோணி கிராமத்தில் சுங்ககேட் கலைஞர் நகர் 2-வது கிராஸ் என்ற இடத்தில் சிலை செய்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த திரு.சத்ராராம் த/பெ யகாராம் என்பவர் விநாயகர் சிலைகளை அரசு சட்டவிதிகளுக்கு உட்படாமல் பிளாஸ்ட் ஆப் பாரிஸ் இரசாயனம் கலந்து தயாரிக்கப்பபடுவதாக தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்களிடமிருந்து வரப்பெற்ற புகாரின் அடிப்படையில் உதவி செயற்பொறியாளர், சுற்றுசூழல் அதிகாரிகள் ஆய்வு செய்ததில் பிளாஸ்ட் ஆப் பாரிஸ் இரசாயனம் கலந்து சுமார் 418 சிலைகள் 3 கொட்டகைகளில் இருப்பது கண்டறியப்பட்டதால் அந்த 3 கொட்டகைகளுக்கும் உதவி சுற்றுசூழல் செயற்பொறியாளர், தாந்தோணி காவல் ஆய்வாளர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் ஆகியோர்கள் முன்னிலையில் வருவாய்த்துறையினரால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட இராசாயனம் கலந்து செய்யப்பட்ட சிலைகளை விநாயகர் சதுர்த்தி பண்டிகை முடிந்தவுன் உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது." என்று குறிப்பிட்டார்.