துபாய்: ரூ.230 கோடி முதல் பரிசு கொண்ட லாட்டரி விற்பனை அமீரகத்தில் விறுவிறுப்பாக நடக்கிறது. வரும் 14 ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் இதற்கான குலுக்கல் நடைபெறுகிறது. இந்த நிலையில், அங்கு வசித்து வரும் இந்தியர்கள் பலரும் இந்த லாட்டரியை வாங்கியுள்ளதால், முதல் பரிசான ரூ.200 கோடி நமக்கு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
லாட்டரியால் லட்சத்தில் ஒருவர் பணக்காரர் ஆகினாலும், அந்த ஒருவரை தவிர மற்ற லட்சக்கணக்கானோர் அதில் பரிசு கிடைக்காமல் ஏமாறுகிறார்கள். இருந்தாலும் நமக்கும் அதிர்ஷ்டம் அடிக்காதா? பணக்காரர் ஆகிவிட மாட்டோமா? என்ற ஆசையில் பலரும் லாட்டரி சீட்டுகளை வாங்குகிறார்கள். பணக்காரர்கள் கூட லாட்டரி சீட்டு வாங்குவதில் மோகம் கொண்டுள்ளனர்.
லாட்டரியால் சிலர் கோடீஸ்வரர் ஆனாலும் பலர் அதில் பணத்தை இழப்பதால், தமிழகத்தில் லாட்டரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நம் நாட்டின் கேரளாவில் லாட்டரி விற்பனையை அரசே நடத்துகிறது. இதேபோன்று சிக்கிம், அசாம், கோவா, நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், மிசோரம், மேகாலயா, பஞ்சாப், மணிப்பூர், மேற்குவங்கம் மாநிலங்களில் லாட்டரி விற்பனைக்கு அனுமதி உள்ளது.
கேரளாவில் போலவே இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகத்திலும் லாட்டரி விற்பனைக்கு அனுமதி உள்ளது. ஆனால் நம் நாட்டை போல லாட்டரி சீட்டுக்கள் போல் அல்லாமல், ஸ்க்ராட்ச் செய்து லக்கி எண் பெறப்படுவதும், எண்களை வைத்தும் லாட்டரி விற்கப்படுகிறது. இந்த லாட்டரியினை ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்கள் மட்டுமின்றி, அங்கு வேலை செய்து வரும் இந்தியர்களும் அதிகளவில் வாங்குகின்றனர்.
அப்படி அங்கு வேலை செய்து வரும் இந்தியர்களுக்கு கூட பல கோடி லாட்டரியில் அடித்து தலைவிதியே மாறிய கதைகளை அவ்வப்போது நாம் கேள்வி பட்டு இருக்கிறோம். துபாய் உள்ளிட்ட நரங்களில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் பலரும் லாட்டரி வாங்குவதை ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் தேசிய லாட்டரிக்கான விற்பனை தற்போது நடைபெற்று வருகிறது.
100 திர்ஹாம் மில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.230 கோடி) முதல் பரிசாக கொண்ட இந்த லாட்டரி டிக்கெட்டின் விலை 50 திர்ஹாம் (இந்திய மதிப்பில் ரூ.1000) ஆகும். டிக்கெட் விற்பனை படுஜோராக நடைபெற்று வரும் நிலையில், குலுக்கல் வரும் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது. குலுக்கல் நேரலை செய்யப்படும். சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு லாட்டரி குலுக்கல் நடைபெறுகிறது.
இந்த குலுக்கல் ஐக்கிய அரபு அமீரக லாட்டரி யூடியூப் சேனலிலும் நேரலை செய்யப்படும். முதல் பரிசாக 100 மில்லியன் திர்ஹாம் பரிசு அடிக்கப் போகும் அதிர்ஷ்டசாலி யார்? என எதிர்பார்ப்பில் அமீரக மக்கள் உள்ளனர். அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்கள் பலரும் இந்த லாட்டரியை விளையாடுவதால் அதிர்ஷ்ட காற்று தங்களுக்கும் அடிக்குமா? என எதிர்பார்ப்பில் காத்து இருக்கிறார்கள்.
ஐக்கிய அரபு அமீரக லாட்டரியை அங்கு வசிப்பவர்கள் மட்டுமே வாங்க முடியும். அதேவேளையில் சில தனியார் நடத்தும் லாட்டரிகள் வெளிநாட்டில் இருந்தாலும் வாங்க அனுமதிக்கின்றன. இதனால் இந்த ரூபாய் 230 கோடியை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. எது எப்படியோ, 200 கோடி ரூபாயை பெறும் அதிர்ஷ்டக்காரர் யார் என்பது நாளை மறுநாள் தெரிந்துவிடும்.