கூடுதலாக ரூ.13,000 கோடி செலவாகும்.. ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு திமுகவின் டிஆர் பாலு கடும் எதிர்ப்பு

post-img
டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை. இந்த திட்டத்தை செயல்படுத்த கூடுதலாக ரூ.13,000 கோடி செலவாகும். அவையில் மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் எப்படி மசோதா கொண்டு வர முடியும்?. ஒரு அரசை 5 ஆண்டுக்கு தேர்வு செய்வதற்கான உரிமை வாக்காளர்களுக்கு உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்காக மக்களின் உரிமையை நாம் ஒடுக்க முடியாது என்று டிஆர் பாலு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். நம் நாட்டில் தற்போது நாடாளுமன்ற தேர்தல் ஒரே நேரத்தில் பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது. ஆனால் ஒவ்வொரு மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் என்பது வெவ்வேறு ஆண்டுகளில் நடந்து வருகிறது. இதனை மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. சட்டசபை தேர்தல், நாடாளுமன்ற தேர்தலை ஒன்றாக நடத்துவது தான் இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்நிலையில் தான் லோக்சபாவில் ‛ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை கொண்டு வருவதற்கான மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் மேக்வால் இன்று தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதன்படி காங்கரஸ், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி, திமுக உள்பட பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எதிர்ப்புக்கு நடுவே இந்த மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி மசோதா மீது எதிர்க்கட்சி தலைவர்கள் பேசினர். திமுக சார்பில் மூத்த தலைவர் டிஆர் பாலு பேசினார். அப்போது அவர் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக டிஆர் பாலு பேசியதாவது: ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை. இந்த திட்டத்தால் அதிக செலவு ஏற்படும். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்த கூடுதலாக ரூ.13,000 கோடி செலவாகும். சட்ட மசோதாவை நாடாளுமன்ற கூட்டு குழுவுக்கு அனுப்பி விவாதம் நடத்த வேண்டும். மேலும் அவையில் மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் எப்படி மசோதா கொண்டு வர முடியும்? . ஒரு அரசை 5 ஆண்டுக்கு தேர்வு செய்வதற்கான உரிமை வாக்காளர்களுக்கு உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்காக மக்களின் உரிமையை நாம் ஒடுக்க முடியாது'' என்று பேசினார்.

Related Post