“ஆம்பளயே இல்லையா?” பெண்களிடம் ஆத்திரமாக பேசியது ஏன்? வீடியோவில் மழுப்பிய செலம் பாமக எம்.எல்.ஏ அருள்

post-img
சேலம்: சேலம் மேற்கு பாமக எம்.எல்.ஏ அருள், பெண்களிடம், "ஆம்பள யாருமே இல்லையா?" என ஆவேசமாகப் பேசியது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்தச் சம்பவம் குறித்து சமாளித்து வீடியோ வெளியிட்டுள்ளார் எம்.எல்.ஏ அருள். சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த முத்துநாயக்கன்பட்டியில் உள்ள பூட்டப்பட்ட கோயிலை திறப்பதற்கான பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றுள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே பிரச்சனை வெடித்த நிலையில், இரு தரப்பினரையும் அழைத்து ஓமலூர் தாசில்தார் பல கட்ட அமைதி பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில், சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள், கோயிலை திறந்து பூஜை நடத்துவது குறித்து பேச்சு வார்த்தைக்காக நேற்று அங்கு சென்றுள்ளார். அப்போது ஒரு தரப்பில் இருந்து ஆண்களும், மற்றொரு தரப்பில் இருந்து பெண்களும் மட்டும் வந்துள்ளனர். அப்போது பாமக எம்.எல்.ஏ அருள் கோபமடைந்து அங்கிருந்த பெண்களிடம், "உங்க வீட்டுல ஆம்பள யாருமே இல்லையா? ஏன் வரல?" என இழிவாகப் பேசியுள்ளார். ஆவேசமாக பேசும் எம்.எல்.ஏ அருளை பார்த்து, பெண்கள் கையெடுத்துக் கும்பிட்டுள்ளனர். இந்த சம்பவம் நடந்தபோது அங்கிருந்த ஒருவர் அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட நிலையில், அந்த வீடியோ வைரலானது. பாமக எம்.எல்.ஏ அருளின் கீழ்த்தரமான பேச்சுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாமக எம்.எல்.ஏ அருள் இந்தச் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பேசியுள்ள எம்.எல்.ஏ அருள், "நான் பெண்களிடம் தவறாகப் பேசுவதாக ஒரு வீடியோ வந்துள்ளது. முத்துநாயக்கன்பட்டியில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவில் தங்களுக்குத்தான் சொந்தம் என தமிழ் பேசும் விஸ்வகர்மா சமூகத்தவரும், தெலுங்கு பேசும் விஸ்வகர்மா சமூகத்தவரும் சொந்தம் கொண்டாடுகின்றனர். இரு தரப்பினரிடமும் ஓமலூர் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், கோவில் பூட்டப்பட்டுவிட்டது. இந்த கோவில் மூடி இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் அந்தப் பகுதிக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், முக்கிய பிரமுகர்களை அழைத்து, இரு தரப்பிலும் 10 10 பேரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என முடிவு செய்து, அதன்படி சென்றோம். அதில் ஒரு பிரிவினர் பெண்களாகவும், ஒரு பிரிவினர் ஆண்களாகவும் அங்கு வந்தார்கள். நான் அந்த பெண்களிடம், அந்த கோவில் தொடர்பான தலைவரை வரச் சொன்னோம். இதோ வருகிறார்கள் வருகிறார்கள் என்றார்கள் ஆனால் வரவில்லை. இதற்கிடையே, அந்த பெண்கள் என் காலைப் பிடித்துக்கொண்டு, "இந்த கோவிலை திறந்துவிடுங்கள்" என கண்ணீர் விட்டார்கள். எனக்கும் வேதனைதான். ஆனால், கோவில் சாவி என்னிடம் இல்லை. அரசு நிர்வாகம் பூட்டி சாவியை வைத்துள்ளது. இரு தரப்பினரும் ஒற்றுமையாக இருந்தால் தான் கோவிலை திறக்க முடியும், நான் எம்.எல்.ஏ என்ற அடிப்படையில் எல்லாம் சட்டத்தை கையில் எடுத்து கோவிலை திறக்கமுடியாது எனப் பேசினேன். அவர்கள் என்னைப் பேசவே விடாமல் கோவிலை திறக்கச் சொல்லி கெஞ்சினார்கள். பொதுவான இடத்தில் உள்ள கோவிலில் நாங்களும் வழிபட உரிமை வேண்டும் என மற்றொரு பிரிவினர் கூறினார்கள். அதன் பிறகுதான் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் வேண்டும் என்பதற்காக அந்தப் பெண்களிடம், "உங்கள் தரப்பில் ஆண்களை வரச் சொல்லுங்கம்மா" என்பதை அழுத்தி அழுத்திச் சொன்னேன். அதுதான் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு விட்டது. இந்த பிரச்சனையை அறிவுப்பூர்வமாக பேசித் தீர்த்து இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். மிக விரைவில் அந்த கோவிலை திறந்து அங்கிருந்தபடியே லைவில் பேசுவேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Related Post