"பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி".. "இந்தியா" கூட்டணிக்கு..!

post-img

மும்பை: 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளர் யார் என்ற விவகாரத்தில் "இந்தியா" கூட்டணியில் காங்கிரஸ், ஜேடியூ கட்சிகள் இடையேயான மோதல் பகிரங்கமாக வெடித்திருக்கிறது. இதனால் லோக்சபா தேர்தலை "இந்தியா" கூட்டணி ஒற்றுமையாக எதிர்கொள்ளுமா? என்ற கேள்வியை இயல்பாகவே காங்கிரஸ், ஜேடியூ கட்சிகள் உருவாக்கி வருகின்றன.


மத்தியில் ஆளும் பாஜக அரசு, அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்பது கருத்து கணிப்புகள் முடிவுகள். என்னதான் 26 கட்சிகள் ஒருங்கிணைந்து "இந்தியா" கூட்டணியை உருவாக்கி இருந்தாலும் அதிகபட்சம் 150, 160 தொகுதிகளைத்தான் அந்த அணி கைப்பற்ற முடியும் என கருத்து கணிப்புகள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றன.


மும்பை கூட்டம்: "இந்தியா" கூட்டணியின் 3-வது ஆலோசனைக் கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வரும் 31, செப்டம்பர் 1-ந் தேதி நடைபெற உள்ளது. மும்பை கூட்டத்தில் மேலும் பல கட்சிகள் "இந்தியா" கூட்டணியில் இணையக் கூடும் எனவும் கூறப்படுகிறது. மும்பை கூட்டத்தில் "இந்தியா" கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர், பிரதமர் வேட்பாளர், குறைந்தபட்ச செயல்திட்டம், தொகுதிப் பங்கீடு ஆகியவை தொடர்பாக விவாதிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


காங்கிரஸ் முழக்கம்: இதனிடையே "இந்தியா" கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் ராகுல் காந்திதான் என்பதில் உறுதியாக உள்ளது. "இந்தியா" கூட்டணி உருவாவதற்கு முன்னர் இருந்தே காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி என்றே அக்கட்சித் தலைவர்கள் கூறி வருகின்றனர்.


காங்கிரஸுக்கு ஜேடியூ பதிலடி: தற்போது ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் உள்ளிட்டோரும் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என பகிரங்கமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். மும்பையில் "இந்தியா" கூட்டம் அடுத்த வாரம் நடைபெறும் நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்து வரும் இந்த கருத்துக்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜேடியூ கட்சி பதிலடி கொடுக்க தொடங்கி உள்ளது. உ.பி, பீகார், சத்தீஸ்கர் மாநில மக்கள், நிதிஷ்குமாரையே பிரதமராக்க விரும்புகின்றனர் என்கிறார் பீகார் அமைச்சர் ஸ்வரண் குமார். மேலும் நேரு, விபிசிங் வெற்றி பெற்ற பூல்பூர் லோக்சபா தொகுதியில் நிதிஷ்குமார் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.



மும்பை கூட்டத்தில் மோதல் வரும்?: மும்பையில் நடைபெறும் "இந்தியா" கூட்டணி கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் குறித்து விவாதம் நடைபெற்றால் கட்சிகளிடையே பெரும் மோதல் வெடிக்கும் என்பதையே இந்த கருத்துகள் வெளிப்படுத்துகின்றன. "இந்தியா" கூட்டணி ஒற்றுமையாக தேர்தலை சந்திக்காது என்ற தங்களது ஆரூடம் எப்படியும் பலித்துவிடும் என்கிற கனவில் இருக்கிறதாம் பாஜக.

 

 

Related Post