சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி வரும் 25 ஆம் தேதி திருப்பூர் வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் 2 மாதங்களில் 3 வது முறையாக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.
லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் அனைத்து கட்சிகளும் முழு வீச்சில் தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். மத்தியில் 3வது முறையாக ஆட்சி அமைக்க பாஜக தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணி விரும்புகிறது. இதேபோல் தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்தி ஆட்சிய பிடிக்க இந்தியா கூட்டணி முயன்று வருகிறது.
எனினும் நிதிஷ் குமார் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்திருப்பது பாஜகவுக்கு கூடுதல் பலமாகவே பார்க்கப்படுகிறது. வட மாநிலங்களில் பாஜக வுக்கு ஆதரவுகள் இருந்தாலும் தென் மாநிலங்களில் பாஜகவால் அதிக தொகுதிகளில் வெற்றி பெற முடியவில்லை. இதன் காரணமாக பாஜக தென் மாநிலங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
இந்த நிலையில் தான் பிரதமர் மோடி வருகிற 25 ஆம் தேதி தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நாடாளுமன்ற தேர்தலில் இந்த முறை அதிக வாக்குகள் பெறுவதோடு அதிக தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோளோடு அண்ணாமலை தமிழத்தில் என் மண் என் மக்கள் என்ற பெயரில் பாத யாத்திரை சென்று மக்களை சந்தித்து வருகிறார். பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக கூறியிருப்பதால் பாஜக இந்த தேர்தலில் தனித்தே போட்டியிடும் என்று தெரிகிறது.
இந்த நிலையில் தான் பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகிறார். அண்ணாமலையில் என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வருகிற 25 ஆம் தேதி திருப்பூர் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் நடப்பு ஆண்டில் பிரதமர் மோடி 3வது முறையா தமிழகம் வருகை தருகிறார்.
ஏற்கனவே நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி 2 ஆம் தேதி பிரதமர் மோடி திருச்சிக்கு வருகை தந்தார். திருச்சி விமான நிலைய புதிய முனையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தும் அடிக்கல் நாட்டியும் பிரதமர் மோடி அந்நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கும் அந்நிகழ்ச்சியில் இரங்கல் தெரிவித்திருந்தார் பிரதமர் மோடி.
தொடர்ந்து, பிரதமர் மோடி 2 வது முறையாக 3 நாள் சுற்றுப்பயணமாக ஜனவரி 19, 20, 21 ஆகிய 3 நாட்கள் தமிழ்நாட்டில் பயணம் மேற்கொண்டார். கேலோ விளையாட்டு போட்டிகளைத் தொடங்கி வைத்துவிட்டு ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோவில்களில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். இந்தியாவின் தென்முனை தொடங்கும் தனுஷ்கோடிக்கும் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டிருந்தார்.