புஷ்பா 2: கூட்டத்தில் சிக்கி இறந்த பெண்.. கடைசியாக மனைவி பேசிய வார்த்தை.. கதறி அழுத கணவர்

post-img

ஹைதராபாத்: அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகியுள்ள புஷ்பா 2 திரைப்படம் சிறப்புக் காட்சியைப் பார்ப்பதற்காக வந்த பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவரது 9 வயதான மகன் பலத்த காயமடைந்தார். இந்நிலையில், கடைசியாக தன்னிடம் மனைவி பேசியது குறித்து ரேவதியின் கணவர் பாஸ்கர் பகிர்ந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம், மொகடம்பள்ளியைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி ரேவதி. இத்தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவர்கள் நான்கு பேரும் புஷ்பா 2 படம் சிறப்புக் காட்சியைப் பார்ப்பதற்காக தியேட்டருக்கு சென்றுள்ளனர். அப்போது, திடீரென அங்கு நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் படக்குழுவினர் அங்கு வந்துள்ளனர். அப்போது, அல்லு அர்ஜூனை பார்ப்பதற்காக பொதுமக்கள் முந்தியடித்துக் கொண்டு சென்றுள்ளனர்.

அப்போது, கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி உயிரிழந்துள்ளார். அவரது மகன் ஸ்ரீதேஜ் கூட பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜூன் மற்றும் படக்குழுவின் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தெலங்கானாவில் இனி எந்தவொரு படத்துக்கும் சிறப்புக் காட்சிக்கான அனுமதி வழங்கப்படாது என அம்மாநில உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், உயிரிழந்த ரேவதியின் கணவர் பாஸ்கர் தனது மனைவி குறித்து கூறியுள்ளதாவது: மூன்று ஆண்டுகளுக்கு முன்பு புஷ்பா முதல் பாகத்தை குடும்பத்தோடு பார்த்தோம். அன்று முதல் எனது மனைவி மற்றும் மகன் அல்லு அர்ஜூனின் ரசிகராகிவிட்டனர். புஷ்பா 2 படத்தை எனது மகனும், மகளும் ஃபர்ஸ்ட் ஷோவை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டனர். அந்த ஆசைதான் என்னுடைய குடும்பத்தையே இந்த நிலைக்கு கொண்டு வந்துவிட்டது. குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றப் போய் என் மனைவி உயிரையே இழந்துவிட்டார்.
டிசம்பர் 4 ஆம் தேதி இரவில் படம் பார்ப்பதற்காக குடும்பத்துடன் திரையரங்குக்கு சென்றோம். மகள் அழுது கொண்டே இருந்ததால் அவரை உறவினர் வீட்டில் விடுவதற்காக சென்றேன். ஆனால், நான் திரும்பி வந்து பார்த்தபோது அவர்கள் அங்கு இல்லை. செல்போனில் தொடர்பு கொண்டபோது தியேட்டருக்குள் இருப்பதாகக் கூறினார். அதுதான் அவர் என்னிடம் பேசிய கடைசி வார்த்தை.

அதன் பிறகு அவரை நான் தேடியபோது எங்கும் கிடைக்கவில்லை. அப்போது, சிலர் கொடுத்த தகவலின்பேரில்தான் மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது எனது மகன் பலத்த காயமடைந்து உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதிகாலை 3 மணி வரை என் மனைவிக்கு என்ன ஆனதென்றே எனக்குத் தெரியவில்லை.
அப்போதான், அங்கிருந்த போலீஸார் என்னிடம் ரேவதி இறந்தது குறித்து தெரிவித்தனர். என் உலகமே இடிந்து என் தலைமேல் விழுந்ததுபோல இருந்தது என்று கதறி அழுதார். ஒரு பக்கம் காயமடைந்து சிகிச்சையில் மகன், மறுபக்கம் பிணவறையில் மனைவி, தன்னுடன் நிற்கதியாக மகள். யாரை நினைத்து அழுவது என்று தெரியாமல் பாஸ்கர் கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Related Post