இந்தியாவில் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெல்லி வர பயணம் திட்டமிடப்பட்டு இருந்த நிலையில் அவர் தற்போது இந்தியா வருவாரா என்ற கேள்வி எழுந்து உள்ளது.
உலகின் சக்தி வாய்ந்த கூட்டமைப்பாக கருதப்படும் ஜி20 கூட்டமைப்பில் அமெரிக்கா, ரஷியா, இந்தியா, பிரிட்டன், சீனா, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, தென் கொரியா, இத்தாலி, சவூதி அரேபியா, துருக்கி, இந்தோனேஷியா, மெக்சிகோ, பிரேசில், துருக்கி, அர்ஜெண்டினா ஆகிய நாடுகள் இருக்கின்றன.
உலக மக்கள் தொகையில் 3ல் 2 மடங்கு மக்கள் தொகையையும், சர்வதேச ஜிடிபியில் 85 சதவீதத்தையும், 75% சர்வதேச வர்த்தகத்தையும் இந்த ஜி20 கூட்டமைப்பில் உள்ள நாடுகள் கொண்டு இருக்கின்றன. இந்த ஜி 20 நாடுகள் மாநாடு ஆண்டுதோறும் வெவ்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வருவது வழக்கமாக இருந்து வருகிறது.
அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜி20 நாடுகளின் 17 வது உச்சி மாநாடு இந்தோனோசியா தலைநகர் பாலியில் நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட பல நாடுகளில் தலைவர்கள் பங்கேற்றார்கள்.
அந்த மாநாட்டில் இந்தியாவுக்கு ஜி 20 நாடுகள் குழுவின் தலைமை பதவி வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் ஒரு நாடு இதன் தலைமை பதவியை ஏற்று, அந்த நாட்டில் ஜி 20 கூட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டுக்கான ஜி 20 மாநாடு டெல்லியில் நடைபெறுகிறது. இதனை அடுத்து மத்திய அரசு ஜி20 மாநாடு ஏற்பாடுகளையும், விளம்பரப் பணிகளையும் பல மாதங்களாக செய்து வருகிறது.
இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்துகொள்ள செப்டம்பர் 7 ஆம் தேதி இந்தியா வருவதாக வெள்ளை மாளிகை அறிவித்தது. டெல்லியில் செப்டம்பர் 10 ஆம் தேதி வரை அவர் 3 நாட்கள் தங்குகிறார். ஜி 20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்க இருக்கும் அவர், பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை மேற்கொள்வார் என்றும் வெள்ளை மாளிகை அறிவித்தது.
செப்டம்பர் 8 ஆம் தேதி ஜி 20 கூட்டத்திற்கு முன்பாக இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஜோ பைடனுக்கு எடுக்கப்பட்ட சோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஆனால், மனைவிக்கு பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக ஜோ பைடன் தனிமைப்படுத்தப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா அறிகுறி இருந்தால் 5 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவதுடன் அடுத்த 5 நாட்கள் வெளியில் முகக்கவசம் அணியவேண்டும்.
இந்தியாவை பொருத்தவரை கொரோனா உறுதி செய்யப்பட்டால் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். ஆனால், தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு இந்த விதி பொருந்துமா என தெரியவில்லை. இது தொடர்பாக வெள்ளை மாளிகை விரைவில் அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.