“இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற ரெடி..” வழிக்கு வந்த சீனா! பின்னால் இருக்கும் காரணம் இதுதானோ!

post-img
பெய்ஜிங்: இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும், இரு நாடுகளின் ஒற்றுமையை அதிகரிக்க முன்வருவதாகவும் சீனா தெரிவித்திருக்கிறது. சீனாவின் இந்த அறிவிப்பு இந்தியாவுக்கு பாசிட்டிவாக அமையும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்தியாவும், சீனாவும் ஏறத்தாழ ஒரே காலத்தில்தான் விடுதலை அடைந்தன. ஆனால் கடந்த 70 ஆண்டுகளில் இரு நாட்டின் வளர்ச்சிக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. இந்தியா உலக பொருளாதாரத்தில் 5வது மிகப்பெரிய நாடாக வளர்ந்திருக்கிறது. சீனா முதல் இடத்தில் இருக்கிறது. குறிப்பாக எலக்ட்ரானிக் உற்பத்தியில் சீனா காட்டும் வேகம் உலக நாடுகளை மிரள வைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் சீன பொருட்களுக்கான சந்தை கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கிக்கொண்டு வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடையே இருக்கும் கம்யூனிச அலர்ஜிதான் இதற்கு காரணம். சீனாவின் தயாரிப்புகளை இந்த நாடுகள் பெரிய அளவில் புறக்கணித்து வருகின்றன. எனவே புதிய சந்தையை சீனா தேடி வருகிறது. ரஷ்யாவும், ஆப்பிரிக்காவும் தற்போதைய சந்தைகளாக இருக்கின்றன. ஆனால் இது பத்தாது. சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு இன்னும் பெரிய சந்தை தேவைப்படுகிறது. அதுதான் இந்தியா! இந்திய சந்தையை கைப்பற்ற சீனா தீவிரமாக முயன்று வருகிறது. ஆனால் 2020ம் ஆண்டு கால்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல் சம்பவம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை கடுமையாக பாதித்தது. பெரிய அளவில் இரு நாட்டின் தலைவர்கள் சந்தித்து பேசிக்கொள்ளவில்லை. எனவே ராணுவ பிரச்னைக்கு தீர்வு காண சீனா முன்வந்தது. இனி இதுபோன்று நடக்காது என்றும், தேவையற்ற பதற்றங்களை தவிர்க்க இரு நாட்டின் வீரர்களுக்கும் அறிவுறுத்தப்பட வேண்டும் என்றும் ராணுவ தளபதிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, எல்லைப்பகுதியில் பழைய நிலை திரும்பியது. பதற்றம் குறைந்தது. கால்வானில் சம்பவம் நடந்து 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போது வரை மீண்டும் பெரியதாக எந்த பிரச்னையும் வெடிக்கவில்லை. இது இரு நாடுகளுக்கும் பாசிட்டிவ் சைன்தான். இந்நிலையில்தான் இன்று இந்திய பாதுகாப்புத்துறை ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் வாங் யீ ஆகியோர் பெய்ஜிங்கில் சந்தித்து உரையாட இருக்கின்றனர். இப்படியான உரையாடல் கடந்த 2019 டிசம்பரில் கடைசியாக நடந்தது. அதன் பின்னர் இப்போதுதான் நடக்கிறது. உரையாடல் இன்று நடக்க இருக்கும் நிலையில், இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக சீனா தெரிவித்திருக்கிறது. அந்நாட்டின் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் லின் ஜியான் இதனை தெரிவித்துள்ளார். "இந்தியாவுடனான புரிதலை அதிகரிக்கவும், அதன் நலன்களை மதிக்கவும் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம். தொடர் உரையாடல்கள்தான் இரு நாட்டின் நம்பிக்கையை வலுப்படுத்தும். வேறுபாடுகளை கலைந்து இரு நாட்டின் உறவுகளை சிறப்பாக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று கூறியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே சிறப்பு பிரதிநிதிகள் கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் இரு நாட்டின் பாதுகாப்பு துறை சார்ந்த தலைவர்கள் பங்கேற்பார்கள். கடந்த 2019ம் ஆண்டு இந்த கூட்டம் நடந்த பிறகு, 2020ல் கால்வான் பள்ளத்தாக்கு மோதல் நடந்தது. எனவே சிறப்பு பிரதிநிதிகள் கூட்டம் நடக்கவில்லை. இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற ரெடி என சீனா அறிவித்திருப்பது, ஒருவேளை இந்திய சந்தையை கைப்பற்ற மேற்கொள்ளப்படும் முயற்சியாக கூட இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

Related Post