ராமாயணத்தை முன்வைத்து உ.பி. கோர்ட் தீர்ப்பு- தம்பியை சுட்டுக் கொன்ற வழக்கில் அண்ணனுக்கு மரண தண்டனை!

post-img
டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தின் பரேலி மாவட்ட நீதிமன்ற நீதிபதி, கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கும் போது ராமாயண கதாபாத்திரங்களான ராமர், பரதனை மேற்கோள்காட்டியது மிகப் பெரும் சர்ச்சையாகி உள்ளது. இந்திய சட்டங்களின் படி தண்டனை வழங்காமல் ராமாயண கதாபாத்திரங்களின் நீதிபதி எப்படி தீர்ப்பு வழங்கலாம் என கண்டனங்களும் குவிந்து வருகின்றன. இந்திய நீதிமன்றங்களில் சட்டங்களின் அடிப்படையில்தான் தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் விதிவிலக்காக சில வழக்குகளில் கூட்டு மனசாட்சி உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டும் இருக்கின்றன. தற்போது ராமாயண கதாபாத்திரங்களை சுட்டிக்காட்டி உத்தரப்பிரதேசம் மாநிலம் பரேலி மாவட்ட நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்திருக்கிறார். பரேலி மாவட்டத்தின் பஹேரி என்ற இடத்தைச் சேர்ந்த சகோதரர்கள் ரகுவீர் சிங், சரண்சிங். இருவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. இதில் ரகுவீர் சிங்கும் அவரது மகன் மோனுவும் சேர்ந்து சரண் சிங்கை கள்ளத்துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்தனர். இதுதான் வழக்கு. இந்த வழக்கு 10 ஆண்டுகளாக பரேலி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கில் ரகுவிர் சிங், மோனு மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இவர்கள் இருவருக்கும் மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. ஆனால் பரேலி மாவட்ட நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளிக்கையில், ராமாயணத்தில் ராமர் 14 ஆண்டுகள் வனவாசம் சென்றார்; அப்போது ராமர் அமர்ந்த அரியாசனத்தில் காலணிகளை வைத்து பரதன் ஆட்சி செய்தார். இதுதான் ஒரு சகோதரர் வெளிப்படுத்துகிற சரியான அன்பு. ஆனால் நீங்கள் சுட்டுக் கொலை செய்துவிட்டீர்கள். ராமாயண பரதனைப் போல இல்லை என்பதால் உங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது என தீர்ப்பளித்துள்ளார். சட்டப்படி குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதால் மரண தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தீர்ப்பில் தெரிவிக்காமல், ராமாயண கதாபாத்திரங்களை மேற்கோள்காட்டி தீர்ப்பளித்ததுதான் தற்போது சர்ச்சையாகி உள்ளது.

Related Post