"முரண்டு தான் பிடிப்பாங்க.. கர்நாடகா எப்போதும் இப்படிதான்" காவிரி விவகாரம்!

post-img

சென்னை: காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கும் இடையே மோதல் நீடிக்கும் நிலையில், இது தொடர்பாகத் தமிழ்நாடு அமைச்சர் துரைமுருகன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகாவில் இருந்து நமக்குக் கிடைக்க வேண்டிய நீரைப் பெறுவதே பெரும் போராட்டமாகவே இருந்துள்ளது. இந்தாண்டும் கூட அதற்கு விதிவிலக்கு இல்லை.


இந்தாண்டு காவிரி டெல்டா பாசனத்திற்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே தண்ணீர் வழங்குவதைக் கர்நாடகா திடீரென நிறுத்தியது.


காவிரி விவகாரம்: இதற்கிடையே காவிரி ஒழுங்காற்று குழு 2ஆம் கட்டமாக அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் வழங்க வேண்டும் என பரிந்துரைத்தது. இதற்குக் கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.. அங்கே போராட்டங்களும் நடைபெற்றது. இந்தச் சூழலில் காவிரியில் இருந்து நீரைத் திறந்துவிடக் கர்நாடக அரசுக்கு வலியுறுத்தும் வகையில் தமிழ்நாடு நீர் வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழகத்தைச் சேர்ந்த எம்பி குழு மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்திக்க உள்ளனர்.


முதலில் இந்தச் சந்திப்பு இன்று மாலை நடைபெறுவதாக இருந்தது. இருப்பினும், இன்று இந்தச் சந்திப்பு நடைபெறாத நிலையில், நாளை காலை மத்திய அமைச்சரைத் தமிழக எம்பிக்கள் குழு சந்திக்க உள்ளது. இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், "மத்திய அமைச்சரைச் சந்திக்க இன்று மாலை அவரது அலுவலகத்திற்குச் சென்றோம். இருப்பினும், பிரதமர் அலுவலகத்தில் இருந்து அவசர அழைப்பு வந்ததால் நாளை காலை சந்திப்பதாக அவர் தெரிவித்தார்.

 

இந்தச் சூழலில் காவிரி ஒழுங்காற்று வாரியம் தமிழ்நாட்டிற்கு 5000 கன அடி நீர் வழங்க வேண்டும் எனச் சொல்லி இருக்கிறது. இது ஆறுதல் தருவதாக இருக்கிறது. கர்நாடக அரசு நீரைத் திறந்துவிடாத நிலையில், ஏற்கனவே பயிர்கள் வாடிவிட்டன. காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய நீரை அளிக்க மத்திய அரசு நெருக்கடி தர வேண்டும். தமிழ்நாட்டிற்குக் கர்நாடகா 107 டி.எம்.சி நீரைத் தர வேண்டி உள்ளது.


முரண்டு பிடிப்பார்கள்: காவிரி விவகாரத்தில் இன்று நேற்றல்ல கர்நாடகா எப்போதுமே முரண்டுதான் பிடிக்கும்.. தமிழகத்திற்குக் காவிரி நீர் தரக் கர்நாடகா எப்போதுமே ஒப்புக் கொண்டதில்லை.. மத்திய அரசு, கர்நாடக அரசை நாங்கள் நம்பவில்லை.. உச்ச நீதிமன்றத்தை மட்டுமே நம்புகிறோம்.. காவிரி விவகாரத்தில் இதுவரை அனைத்தையுமே நீதிமன்றத்தின் மூலமாகவே பெற்றுள்ளோம்.


மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை நாளை காலை 9.30 மணிக்குச் சந்தித்து மனு அளிக்க உள்ளோம். காவிரியில் நீர் திறக்க கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும். கர்நாடக அரசு அவர்கள் மாநில மக்கள் நலன் கருதி முடிவெடுத்துள்ளனர்.


ஏன் எதிர்க்கிறார்கள்: அதேநேரம் தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய நொடிக்கு 5 ஆயிரம் கன அடி நீரை அவர்கள் தர வேண்டும். போதியளவில் நீர் இல்லை என்கிறது கர்நாடகா.. நாங்கள் நீர் இருக்கிறது என்கிறோம்... யாராவது மூன்றாவது நபர் தண்ணீர் இருக்கிறதா இல்லையா என்பதைப் பார்த்துச் சொல்லட்டும் என்கிறோம்.. அதற்கும் அவர்கள் எதிர்க்கிறார்கள். இது ஏன் என்று புரியவில்லை" என்று அவர் தெரிவித்தார்.


மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தை தமிழக எம்பிக்கள் குழு நாளை சந்திக்கிறது. ஷெகாவத்துடன் இன்று நடைபெற இருந்த சந்திப்பு நாளை நடைபெறுகிறது. நாளை காலை சந்திக்க உள்ளனர். இந்தச் சந்திப்பின் போது தமிழ்நாட்டிற்கான காவிரி நீரைக் கர்நாடகா வழங்க ஜல்சக்தி அமைச்சரை எம்பிக்கள் வலியுறுத்துவார்கள்.. தமிழக எம்பிக்கள் குழுவில் டிஆர் பாலு, தம்பிதுரை, ஜோதிமணி என 12 எம்பிக்கள் இடம் பெற்றுள்ளனர்.

 

Related Post