"Go Back Amit Shah": டிச.27-ல் அமித்ஷாவுக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டும் தமிழக காங்கிரஸ்!

post-img
சென்னை: அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்தி விமர்சித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 27-ந் தேதி தமிழ்நாடு வருகை தரும் போது கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் அரசியல் சாசனத்தின் மீதான விவாதத்தில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா அம்பேத்கரை விமர்சித்ததால் கறுப்புக் கொடி போராட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை தமது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளதாவது: "வரும் 27ஆம் தேதி தமிழ்நாடு வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக எனது தலைமையில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டமும், முற்றுகை போராட்டமும் நடைபெறும். ஜனநாயகத்தின் மீதும், இந்திய அரசியல் அமைப்பின் மீதும் நம்பிக்கை வைத்துள்ள அனைவரும் ஒன்று கூடுவோம். இவ்வாறு செல்வப் பெருந்தகை அழைப்பு விடுத்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தர உள்ளார் என்கின்றன தகவல்கள். மறைந்த தேமுதிகவின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் டிசம்பர் 28-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. தேமுதிக இதனை குருபூஜையாக நடத்துகிறது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்கக் கூடும் என கூறப்படுகிறது. டிசம்பர் 27-ந் தேதி சென்னை வரும் அமித்ஷா, விஜயகாந்த் நினைவு தின நிகழ்ச்சியில் மட்டுமல்லாது திருவண்ணாமலை சென்று வழிபாடு செய்யவும் இருக்கிறாராம். அதேபோல தமிழ்நாட்டில் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் பாஜக தலைமை அலுவலகங்களையும் அமித்ஷா திறந்து வைக்க இருக்கிறாராம். அரசியல் சாசனம் ஏற்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் அரசியல் சாசனம் மீதான விவாதம் நடைபெற்றது. லோக்சபாவில் இந்த விவாதங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்தார். ராஜ்யசபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளித்தார். அப்போது, அம்பேத்கர்.. அம்பேத்கர் என கோஷம் போடுவது பேஷனாகிவிட்டது.. அதற்கு பதிலாக கடவுளின் பெயரை உச்சரித்தால் சொர்க்கம் கிடைக்கும் என பேசியிருந்தார் அமித்ஷா. அமித்ஷாவின் அண்ணல் அம்பேத்கர் பேச்சுக்கு எதிராக இன்று வரை நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெறுகின்றன. நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் உக்கிரப் போராட்டம் நடத்தினர். நாடாளுமன்றத்தை முடக்கி வைத்தனர் இந்தியா கூட்டணி எம்பிக்கள். நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணிக்கு எதிராக பாஜகவினர் போட்டி போராட்டம் நடத்த அது பெரும் மோதலாக முடிவடைந்தது. இந்த மோதலில் பாஜக எம்பிக்கள் மண்டைகள் உடைந்தன. தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு போராட்டங்களை நடத்தியது. காங்கிரஸ் கட்சியும் ஒருநாள் போராட்டம் நடத்தியது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் இன்று வரை தொடர் போராட்டம் நடத்தி அமித்ஷாவின் உருவபொம்மைகளை எரித்தும் வருகின்றனர். இதன் அடுத்த கட்டமாக Go Back Amit Shah கோஷத்துடன் கறுப்புக் கொடி காட்டும் போராட்டத்தை தமிழ்நாடு காங்கிரஸ் நடத்த உள்ளது.

Related Post